பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகள்

வடக்குக் கிழக்கில் இருந்து மேலும் பல தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம்

தமிழ்நாடு தனுஷ்கோடியில் தரையிறங்கினர்
பதிப்பு: 2022 ஏப். 10 22:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 00:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் எனக்கோரியும், இலங்கைத்தீவின் தென்பகுதி முழுதும் இரவு பகலாக நடைபெறும் மாபெரும் எதிர்ப்பு ஆர்பாட்ட பேரணிகள் தமிழர் தாயகப்பகுதிகளிலும் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக யாழ்பாணம், வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்படி எதிர்ப்பு பேரணிகள் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தமிழகத்திற்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் அவலமும் நடந்து வருகின்றது
 
இலங்கையில் நிலவும் பெரும் பொருளாதார கஷ்டத்திற்க்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மன்னார் பேசாலைப் பகுதியில் இருந்து படகு மூலம் கடந்த மார்ச் 22ஆம் திகதி இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் முதன் முதலாக படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற நிலையில் திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் இரண்டு படகுகள் மூலம் இன்று 10 ஆம் திகதி ஞாயிறு அதிகாலையில் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர்.

மேலும் இலங்கையில் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி அதிகாலை இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர்களும், அன்றைய தினம் இரவு 8 மணியளவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பத்து பேர்களும் மன்னார் ஊடாக படகுகள் மூலம் தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

அத்துடன் இம்மாதம் 8ஆம் திகதியன்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் தமிழகம் பயணித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே 19 பேரைக் கொண்ட ஐந்து குடும்பத்தினர் இன்று 10ஆம் திகதி அதிகாலை மன்னாரில் இருந்து படகுகள் மூலம் தமிழகம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர்.

மேலும் இன்று தமிழகம் தனுஷ்கோடியை வந்தடைந்த இலங்கை தமிழர்கள் இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் இந்திய பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.

இதேவேளை இலங்கையில் தொடர்ந்து நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் ஊடாக படகுகள் மூலம் தமிழகத்திற்கு செல்வதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் மக்களை தமிழ் நாட்டிற்கு படகு மூலம் அழைத்து செல்லும் நடவடிக்கைகளை ஒரு சிலர் தொழில் போன்று செய்து வருவதாகவும் இதில் பல இடைத்தரகர்கள் செயல்படுவதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய உணவுப்பொருட்கள், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அன்றாடப் பாவனை பொருட்களின் விலை ஏற்றம் உட்பட தொடர்சியான மின்வெட்டு காரணமாக, இலங்கை மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல மாதங்களாக இவ்வாறான நிலை தொடர்வதினால், பொறுமை இழந்த பொதுமக்கள், பெரும் சீற்றமடைந்து அரசாங்கத்திற்கு எதிராக தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவே, இலங்கை மக்கள் தற்போது முகம் கொடுத்துள்ள அனைத்து அவலநிலைக்கும் முற்றிலும் காரண‌ம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், ஜனாதிபதி கோட்டபாயவும், அவரின் அரசாங்கமும் உடன் பதவி விலகவேண்டும் என தொடர்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குளறுபடிகள் காரணமாக வாழவே முடியாது எனக் கருதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தப்பிச் செல்வதற்கு பெரும் முனைப்பு காட்டுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான தருணத்திலேயே வட கிழக்கு தமிழர் தாயக மக்கள் அண்டை நாடான இந்தியாவின் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.