தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டு

கொழும்பு மைய அரசியலை ஆரம்பித்துள்ள கஜேந்திரர்கள்

சஜித்தின் பிரேரணையில் முன் நிபந்தனைகள் எதுவுமேயின்றி கைச்சாத்திட்டனர்- சுமந்திரன் சந்திரிகா சந்திப்பு
பதிப்பு: 2022 ஏப். 14 00:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 22 23:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு கொழும்பில் அறிவித்துள்ளது. முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று புதன்கிழமை காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
 
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூத்த பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் சார்பான எந்தவொரு முன் நிபந்தனைகளையும் முன்வைக்காது நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளது. அதேவேளை, சஜித் பிரேமதாசாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான ஈ,பி,ஆர்.எல்.எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச் சந்திரன் மற்றும் சிறிகாந்தா தலைமையிலான தமிழ் மக்கள் கட்சியும் கையொப்பமிட்டுப் பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளன.

மாவை சேனாதிராஜா, முன்னாள் நீதிபதி க.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தர்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ந. சிறீகாந்தா ஆகியோர் குறித்த கடிதத்தில் கைப்பொமிட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழரசுக் கட்சியும் அந்தக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கைச்சாத்திடவுள்ளது. அதற்கான பேச்சுக்களை சஜித் பிரேமதாச நடத்தியுள்ளார்.

முன்னாள் சந்திரிகா தலைமையில் சில நாட்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்ற அவசரக் கூட்டம் ஒன்றிலும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றியிருக்கிறார். சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது 1996 ஆம் ஆண்டு யாழ் செம்மனியில் ஆறு நூறு தமிழ் இளைஞர் யுவதிகள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவின் ஆட்சியில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினரால் தமிழ் இன அழிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் சந்திரிகா தலைமையிலான கூட்டத்தில் சுமந்திரன் பங்குபற்றியுள்ளார். ஆட்சி மாற்றம் தொடர்பாகப் பேசப்பட்ட அந்தக் கூட்டத்தில், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை கோரப்படும் நேரத்தில், சந்திரிகாவின் ஆலோசனையுடன் அமைக்கப்படவுள்ள புதிய ஆட்சியை எந்த அடிப்படையில் தமிழர் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்விகளும் உண்டு.

இந்தவொரு நிலையில் ஒரு நாடு இரு தேசம் என்ற கோட்பாட்டை முன்வைத்து 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 2020 இல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பின்னர் சுமந்திரன் போன்ற கொழும்பு மைய அரசியலில் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் தற்போது வலுவடைந்துள்ளது.

வடக்குக் கிழக்கில் 2009 இற்குப் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்பாத மற்றும் 2015 இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் வீடமைப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பௌத்த சின்னங்களைத் தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் திணித்த சஜித் பிரேமதாசாவின் கோரிக்கையை முன்னணி விரைவாக ஏற்றிருக்கிறது.

அதாவது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் சார்பான எந்தவொரு முன் நிபந்தனைகளையும் சஜித் பிரேமதாசாவிடம் விதிக்கவில்லை.

வெறுமனே ஆட்சி மாற்றம் கருதிய சிங்கள பௌத்த தேசிய இடமாற்றத்துக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையொப்பமிட்டுள்ளது.

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பின்னரான சூழலில் கொழும்பு மைய அரசியல் ஈடுபாடு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் குடிகொண்டுவிட்டதாகவே கருத இடமுண்டு.

கொழும்பு மைய அரசியல் செயற்பாடுகளுக்குள் சுமந்திரன் ஈடுபடுகின்றார் என்று 2020 இற்கு முன்னர் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று அதே அரசியல் நகர்வுகளை அப்படியே கைப்பற்றியிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.