தனக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க

நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்க கோட்டா இணக்கம்

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஆராய்வு
பதிப்பு: 2022 ஏப். 18 22:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 20 01:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் நிறைவேற்று அதிகாரமுறையில் உள்ள குறிப்பிடத்தக்க அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் புதிய நகல் சட்டவரைபு ஒன்றைச் சமர்ப்பித்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.
 
நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்துவது தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச இணங்கியிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் இன்று கூறியிருந்தார்.

ஆனால் இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அதிகாரபூர்வமாக எதுவுமே கூறவில்லை. இருந்தாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய முக்கியமான அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்துவது தொடர்பாக இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றியதாகவும் அறிய முடிகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

தனக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கிலும் தனது ஜனாதிபதிப் பதவியைத் தக்க வைக்கும் நோக்கிலுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க கோட்டாபய ராஜபக்ச இணங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.