போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் பொறுக்கூறவில்லை- உறவினர்கள் ஆதங்கம்

நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்
பதிப்பு: 2022 ஏப். 30 10:56
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 01 11:10
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் காணாமல் போன எமது அன்புக்குரிய உறவுகளை மீட்டுத்தருமாறு தொடர்சியாகப் போராடிவரும் நிலையில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் வெறுமனே அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன்மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும், காதுகள் மந்தமாகியுள்ளதுடன், கண்களும் பார்வையிழந்து குருடாகிவிட்டது என்றே, கருதவேண்டியுள்ளதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை காலை 10.30க்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று காலை நடைபெற்ற மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய வேளையே குறித்த சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது--

நாங்கள் எமது போராட்டத்தை இன்று, நேற்று ஆரம்பிக்கவில்லை. சுமார் 12 வருடங்களுக்கு முன்பே நாம் எமது போராட்டத்தை ஆரம்பித்து அதனைத் தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றோம். யுத்தகாலத்தில் எமது அன்புக்குரியவர்கள் பலர் காணாமல் போன நிலையில், பலர் பார்த்திருக்க படைத்தரப்பிடம் எமது கைகளால் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையும் தொலைத்துவிட்டு இன்று நாங்கள் அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கூட அறியமுடியாத அவலநிலையில் அவர்களைத் தொடர்சியாகத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தநிலையிலே எமக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரும் எனும் நம்பிக்கையுடன், நாட்களையும் பொழுதையும் துன்பத்துடன் கழிக்கின்றோம். ஆனால் சர்வதேச நாடுகளும் எமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை காத்திரமான செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளாது கண்மூடிக்கிடக்கிறது. இத்தகைய நிலையில் நாம் யாரிடம் போய் எமக்கான நீதியைப் பெறுவது. எமக்கான நீதியைப் பெற்றுத் தராத சர்வதேசம், எங்களின் அவலக்குரலைச் செவி சாய்க்காத சர்வதேசம், இலங்கை அரசுடன் சேர்ந்து தற்போது எம்மை வேடிக்கை பார்க்கின்றது.

இறுதி யுத்தம் எனும் பெயரில் எமது உறவுகளை கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை குறித்து நாங்கள் தொடர்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எனினும் இதுவரை எமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் காது மந்தம் ஆகியுள்ளதுடன், கண்களும் குருடாகிவிட்டது என்றே நாங்கள் கருதுகின்றோம். மேலும் எங்கள் உறவுகளுக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிக்கு நாங்கள் நீதியைக் கேட்டு,கேட்டு களைத்து போய் விட்டோம். எனினும் எமது அவலக்குரலை கேட்டும், செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று, காதுகள் கேட்காது மந்தம் ஆகி, கண்கள் குருடாகி ஜனாதிபதியும் பிரதமரும் கற்களைப் போல ஆகிவிட்டனர்.

வலிந்து காணாமல் போன உறவுகள் தொடர்பில் சகோதரர்களான ஜனாதிபதியும், பிரதமரும் அணுவளவேனும் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனினும் நாம் எமது உயிர் உள்ளவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்போம் அத்துடன் எமக்கான நீதியும் ஒரு நாள் கிடைக்கப்பெறும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.