இழுபறி நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசு

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கச் சட்டத்தரணிகள் சங்கம் முயற்சி- மகிந்த பதவி விலக மறுப்பு

பிரதமர் பதவியை சஜித் நிராகரித்தார்- 2.9 ரில்லியன் உடனடியாகத் தேவையென்கிறார் அலி சப்ரி
பதிப்பு: 2022 மே 08 22:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 13 11:40
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொள்ளும் முயற்சியை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், பிரதமர் பதவிக்கு இணங்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச விலகினால், ஜனாதிபதிப் பதவியை ஏற்கத் தயாராகவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கான உடனடித் தீர்வுக்குச் சர்வதேச நாணய நிதியம் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்ப்பதாகவும் அதன் காரணத்தினாலேயே இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் இந்த முயற்சியைக் கையாண்டு வருவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்க வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக மறுப்பதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

சட்டத்தரணிகள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்சவுடன் பேசியதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் முன்னாள் மூத்த அமைச்சர் கருஜயசூரியவுடனும் சட்டத்தரணிகள் சங்கம் உரையாடியதாகக் கூறப்படுகின்றது. ஆனால் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ளது. பதினெட்டு மாதங்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்க வேண்டுமென்பது பிரதான கோரிக்கையாகும்.

இதனை ஏற்றுக்கொண்ட சஜித் பிரேமதாச, விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறவுள்ள பொறிமுறைகளுக்குக் கட்சி வேறுபாடுகள் இன்றி ஆதரவு வழங்குவதாகவும், சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இடைக்கால அரசு ஒன்றை அமைத்து வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கொழும்பில் ஊடகங்களுக்குக் கூறியுள்ளர். இருந்தாலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்தும் எதிர்க்கட்சிகளுடன் பேசி வருவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய நெருக்கடி நிலையில் 2.9 ரில்லியன்வரைதான் கடன் பெறமுடியுமெனவும் ஆனால் நான்கு ரில்லியன் கிடைத்தால் மாத்திரமே நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்றும், இல்லையேல் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாதெனவும் நிதியமைச்சர் அலிசப்ரி நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விபரித்திருக்கிறார்.

இதன் பின்னணியிலேயே இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய கட்டாயப் பரிந்துரை ஒன்றை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டு வருவதாகவும், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் சிலர் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கொழும்பில் உள்ள உலக வங்கி அதிகாரிகள் சிலரும் குறிப்பிட்ட சில அரசியல் பிரமுகர்களுடன், கடன் வழங்குவது தொடர்பாக உரையாடி வருவதாகவும் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தே இந்த உரையாடல்கள் இடம்பெறுவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி காலிமுகத் திடலில் கடந்த இருபத்து ஐந்து நாட்களுக்கும் மேலாகப் போராடுகின்ற இளைஞர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகச் சட்டத்தரணிகள் சங்கம் நேரடியாகக் கவனம் செலுத்தி வருகின்றது.

குறிப்பாக காலிமுகத் திடலில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டமைக்குக் கடும் கண்டம் வெளியிட்டதுடன், பொலிஸ் வாகனங்களை அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் காலிமுகத் திடலில் போராடும் இளைஞர்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்தவொரு சூழலிலேயே இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பரிந்துரை ஒன்றைச் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டு வருவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.