கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில்

புதிய பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ச

ரணில், நிமால் சிறிபாலடி சில்வா, வியதாச ராஜபக்ச, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை
பதிப்பு: 2022 மே 11 17:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 11 23:04
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் உரையாடிய பின்னரே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இரவு அரச தொலைக்காட்சியில் விசேட உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்த 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
 
ஜனாதிபதிப் பதவியில் இருந்து பதவி விலகினால் மாத்திரமே பிரதமர் பதவியை ஏற்பேன் என்று சஜித் பிரேமதாச கூறிவந்த நிலையில். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க கோட்டாபய ராஜபக்ச முற்பட்டிருக்கலாமென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி அணிக்குள் சஜித் பிரேமதாசவுடன் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க அதனைச் சாதகமாக்கி, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த பிரதமர் பதவியை ஏற்கக் கூடும் என்றும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்துடன் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கோட்டாபய ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே சாதாரண பெரும்பான்மையோடு இடைக்கால அரசாங்கம் ஒன்றை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்ததாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் சபாநாயகர் தலைமையில் இன்று மாலை சூம் செயலி மூலமாக நடத்தப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி நிபந்தனை விதித்திருந்தது.

அந்த நிபந்தனை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எதுவுமே கூறவில்லை. இந்தவொரு நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்பாரென கொழும்பில் செய்திகள் கசிந்தன.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஆதரவுடன். பிரதமர் பதவிக்கு மூன்று பெயர்களை பிரேரித்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

நிமால் சிறிபாலடி சில்வா, வியதாச ராஜபக்ச, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களை கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட ஒருவருக்கே பிரதமர் பதவியை வழங்க முடியும் என்பது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதியாகும்.

இதேவேளை, கொழும்பில் இன்று மூன்றாவது நாளாகவும் ஊரடங்குச் சட்டம் தொடருகின்றது. நாளை வியாழக்கிழமை காலை ஏழு மணிக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.