தமிழகம் செல்வதைத் தடுக்க

இலங்கைக் கடற்படை தலைமன்னார் கடலில் ரோந்து நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியால், வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் இருந்து பலர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்
பதிப்பு: 2022 மே 12 15:50
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 13 11:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள கரையோரப் பிரதேசங்கள் மற்றும் தலைமன்னாருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மணல் தீடைகளில், இலங்கை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மிகக்கடுமையான பொருளாதார நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் நிலையிலேயே அதனை கட்டுப்படுத்த கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இலங்கையின் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவு தற்பொழுது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் உட்பட அன்றாடப் பாவனை பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. அத்துடன் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் நிலையிலேயே, அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக படகுகள் மூலம் தப்பிச் செல்லும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள், இந்தியப் பயணத்தின் இடைநடுவே ஆழ்கடலிலும், மணல் தீடைகளிலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் தமிழகம் செல்ல முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பொலிஸாரினாலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை தமிழகத்திற்கு படகில் சென்ற பத்து பேர்கள், இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பத்து பேரில் மன்னார் மடுறோட் தேக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியும் அவர்களின் ஒரு வயது பூர்த்தியடையாத கைக்குழந்தையும் அடங்குவதாகவும், மிகுதியான எழுவர் பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் கடந்த சனிக்கிழமை அதிகாலை இலங்கை கடற்பரப்பில் தலைமன்னாருக்கு அருகில் உள்ள மணல் தீடையொன்றில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டவேளை அங்கு அநாதரவான நிலையில் காணப்பட்ட இரண்டு பெண்களை மீட்டுள்ளனர்.

பொருளாதார நிலை காரணமாக மன்னார் பகுதியில் இருந்து படகில் தமிழகம் செல்லும் வழியில் படக்கோட்டிகளினால், மணல் தீடையில் இறக்கிவிடப்பட்ட நிலையில், அங்கு எவ்வித உதவியுமின்றி அனாதரவாக காணப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களே இவ்விதம் கடற்படையினரால் மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடற்படையினரால் கடந்த சனி அதிகாலை, இருவேறு சந்தர்ப்பங்களிலும் கைது செய்யப்பட்ட மேற்படி 12 நபர்களும் இலங்கை கடற்படையினரால், சனிக்கிழமை பிற்பகல் மன்னார் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் சனிக்கிழமை மாலை குறித்த 12 நபர்களையும் மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்த வேளை 12 சந்தேக நபர்களையும் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்

இதேவேளை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர்கள் மற்றும் அவர்களை ஏற்றிச்சென்ற படகோட்டிகள் உட்பட 14 நபர்கள் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து குறித்த 14 நபர்களும் மன்னார் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் யாழ்ப்பாணம் பலாலி கடல் ஊடாக தமிழகம் செல்வதற்கு முற்பட்ட 13 நபர்கள் கடந்த வாரம் காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்கலாக கைது செய்யப்பட்ட மேற்படி 13 பேர்களும் பலாலி பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இது இவ்விதம் இருக்க இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதாரக் கஷ்டம் காரணமாக வவுனியா மாவட்டம் சிதம்பரமும் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படகு மூலம் தமிழகத்திற்கு சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் சேரங்கோட்டை கடற்கரையச் சென்றடைந்த இவர்கள் தற்பொழுது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தற்பொழுது நிலவும் பொருளாதாரக் கஷ்டம் மற்றும் வறுமை நிலையினால் தமிழர் தாயகப்பகுதியில் இருந்து, இதுவரை சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் படகு மூலம் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

வட மாகாண கடற்பரப்பிலும் ஏனைய கரையோரப்பகுதிகளிலும் இலங்கை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதினால் தமிழகத்திற்கு படகு மூலம் அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.