வடமாகாணம்

மன்னாரில் போதைப் பொருள் பயன்படுத்திய இருவர் மரணம்

பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2022 மே 31 08:42
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 00:44
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் பேசாலையில் இருந்து காரொன்றில் கொழும்பு நோக்கி பயணித்தவேளை அதிக அளவு போதைவஸ்தைப் பயன்படுத்திய இளம் குடும்பஸ்தர்கள் இருவர் பயணத்தின் இடைநடுவே திடீர் சுகயீனம் அடைந்து 30ஆம் திகதி திங்கட்கிழமை இரவு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்த இருவரின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலங்கள் இரண்டும் விசேட சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூறு ஆய்வுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
சம்பவதினம் மரணமடைந்த இரண்டு குடும்பஸ்தர்களுடன் கொழும்பு நோக்கி பயணித்த காரைச் செலுத்திய சாரதியும் பிறிதொரு இளைஞரும் அதிக மது பாவனை மற்றும் அதீத போதைவஸ்து பாவனையினால் ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காரில் பயணித்த குடும்பஸ்தர்கள் இருவரின் திடீர் மரணம் மற்றும் போதைவஸ்து பாவனை தொடர்பில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் சாரதியும் மற்றைய இளைஞரும், மன்னார் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவினரின் நேரடி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கூர்மைச் செய்தி தளத்திற்கு தெரிவித்தனர்.

அத்துடன் தடயவியல் பொலிஸாரும் குறித்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த நால்வர் நேற்று திங்கள் இரவு 7.30 மணியளவில் காரொன்றில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர். மேலும் குறித்த நால்வரும் தாம் பயணித்த காரில் மதுபோத்தல்கள் மற்றும் ஐஸ் எனும் போதைவஸ்தினையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பேசாலையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வேளை குறித்த நால்வரும் மன்னார் உயிலங்குளம் பகுதியில் தமது காரை நிறுத்தி அங்கு மது அருந்தியுள்ளதாகவும் அச்சமயம் சாரதி தவிர்ந்த மிகுதியான மூவரும், மதுவுடன் ஐஸ் எனும் போதைப்பொருளை அதிக அளவு பயன்படுத்தியதன் பின்னர் நடனமாடியதாகவும், அவ்வேளை குறித்த மூவரும் திடீர் சுகயீனம் அடைந்து பல உபாதைகளுக்கு உள்ளாகி கீழே வீழ்ந்து மயக்கம் அடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சூழ்நிலையில் நிலைமையை உணர்ந்த கார் சாரதி மூவரையும் குறித்த காரில் ஏற்றி மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து வந்து இன்று அதிகாலை அனுமதித்தவேளை மூவரில் இருவர் ஏற்கனவே மரணமடைந்திருந்தமையும், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.

மேலும், நேற்றைய சம்பவத்தில் மரணமடைந்தவர்கள், ஒரு குழந்தையின் தந்தையான 26 வயதுடைய மகேந்திரன் பிரதீப் மற்றும் ஒரு குழந்தையின் தந்தையான 34 வயதுடைய மதார்சா மசூத் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த இருவரும் பேசாலை காட்டஸ்பத்திரியைச் சேர்ந்தவர்கள் என மன்னார் பொது வைத்தியசாலை அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

மேலும் மன்னார் பொலிஸார் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றுக்கு தாக்கல் செய்த விஷேட அறிக்கையின் பிரகாரம், நீதிமன்ற உத்தரவின் படி சடலங்கள் இரண்டும் விசேட சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூறு ஆய்வுக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய் மாலை ஆறு மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த காரின் சாரதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரினால் வைத்தியசாலைக்கு சடலங்களுடன் எடுத்து வரப்பட்ட கார் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி காரை சோதனையிட்ட மன்னார் பொலிஸார், குறித்த காரில் இருந்து தங்க ஆபரணங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பெரும் அளவு பணத்தினை மீட்டுள்ளனர்.

இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிலங்குளம் பகுதியில் திடீர் மரணமடைந்த நிலையில், குறித்த சம்பவத்தினால் மன்னார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் புலன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சாரதி உட்பட மற்றைய இளைஞர் குறித்தும் மன்னார் பொலிஸாரினால் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், மேற்படி இருவரையும் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.