வடமாகாணம்

மன்னாரில் குடும்பஸ்தர் இருவர் படுகொலை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருபது பேர் தலைமறைவு

பதினாறுபேரின் விபரங்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தகவல்
பதிப்பு: 2022 ஜூன் 12 17:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 13 23:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைத்தீவின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளம் கிராமத்தில் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான ஆண்கள் தலை மறைவாகியுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். படுகொலைச் சம்பவத்தில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த 20ற்கும் மேற்பட்ட ஆண்கள் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிலையில் 16 சந்தேகநபர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உயிலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
 
குறித்த படுகொலைகளை மேற்கொண்ட கும்பலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உள்ளமை புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், குறித்த மூவரும் கொலைகளை மேற்கொள்வதற்காகவே வேறு மாவட்டத்தில் இருந்து நொச்சிக்குளத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கலாம், என தாம் சந்தேகிப்பதாகப் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

குறித்த படுகொலைகள் சடுதியாக நிகழ்ந்த சம்பவம் இல்லை என்றும், நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என புலன் விசாரணையில் நன்கு புலப்படுவதாகவும் உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நொச்சிக்குளத்தில் கடந்த வெள்ளி இடம்பெற்ற கொலையுடன் சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

முருங்கன் பண்ணவெட்டுவான் காட்டுப்பகுதியில் இவர்கள் மறைந்துள்ளதாக அயல் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தீவிர புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி காலை 11 மணியளவில் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் றோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலையுண்ட சகோதரர்கள் இருவரின் சடலங்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிலங்குளம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டன.

படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி படுகொலை செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரின் சடலங்கள் சட்ட வைத்திய நிபுணரின் பிரேத பரிசோதனைக்காக கடந்த வெள்ளி மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த நான்காம் திகதி சனிக்கிழமை பிற்பகல் உயிலங்குளம் விளையாட்டுத் திடலில் மாட்டு வண்டி சவாரி பந்தயமொன்று இடம்பெற்றது. குறித்த மாட்டு வண்டிச் சவாரியில் நொச்சிக்குளம் மற்றும் உயிலங்குளம் அணியினர் போட்டியிட்டனர். அத்துடன் அன்றைய தினம் நடைபெற்ற மாட்டு வண்டிச் சவாரியின் முதற் சுற்றில் நொச்சிக்குளம் அணியினர் வெற்றியடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த வெற்றி தொடர்பாக, உயிலங்குளத்தில் இருந்து பந்தயத்தில் கலந்துகொண்டு தோல்வியுற்ற அணியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் போட்டியின் முதற் சுற்றில் வெற்றியடைந்த நொச்சிக்குளம் அணியினருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பந்தய திடலில் நொச்சிக்குளம் அணியினர் மீது உயிலங்குளத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நொச்சிக்குளத்தில் திருமணம் செய்துள்ள உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் உயிலங்குளம் அணியினருடன் இணைந்து நொச்சிக்குளம் மாட்டு வண்டி சவாரி அணியினருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், நொச்சிக்குளம் அணியினர் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார்.

இச் சூழ்நிலையில் அன்றைய தினம் உயிலங்குளம் மாட்டு வண்டி சவாரி முதற் சுற்றிலேயே இடை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய நிலையிலே கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை உயிலங்குளம் மாட்டு வண்டி சவாரியின் போது நொச்சிக்குளம் அணியினருடன் மோதலில் ஈடுபட்ட நொச்சிக்குளத்தில் திருமணம் முடித்து அங்கு வசித்து வரும் பிரஸ்தாப நபருடன் நொச்சிக்குளத்தின் ஊர்வாசிகள் சிலர், கடந்த நான்காம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டு வண்டிச் சவாரியின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் பிரஸ்தாபித்ததாகவும், இதன் போது ஏற்பட்ட கடுமையான வாய்த் தர்க்கத்தையடுத்து, மேற்படி நபர் மீது நொச்சிக்குளம் ஊர்வாசிகள் சிலர் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நொச்சிக்குளம் ஊரவர்களின் வாள் வீச்சில் படுகாயமடைந்த குறித்த நபர் தனது உயிரை பாதுகாக்கும் நோக்குடன், காயத்துடன் மன்னார் - மதவாச்சி பிரதான வீதிக்கு தப்பியோடிய நிலையில், அவ்வீதியால் சென்றவர்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ் மூலமாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தருணத்தில் நொச்சிக்குளம் ஊரவர்கள் சிலர், தமது உறவினர் மீது வாள் வீச்சை மேற்கொண்டு, அவர் காயமடைந்த தகவலை உயிலங்குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் கேள்வியுற்றதாகவும், இதையடுத்து குறித்த இரண்டு சகோதரர்களும் தமது நண்பர்கள் சிலர் சகிதம் நொச்சிக்குளம் கிராமத்திற்கு விரைந்து அங்குள்ள வீடொன்றிற்குள் அத்துமீறிச் சென்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போதே அவ்விடத்திற்கு வருகை தந்த பெரும் எண்ணிக்கையானோர் குறித்த சகோதர்கள் மீதும் அவர்களின் சகாக்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன் சகோதரர்கள் மீது கூரான ஆயுதங்கள் மற்றும் வாள்களினால் சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மிக மோசமான கடுங்காயத்திற்கு இலக்கான சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை சம்பவத்திற்கு கடந்த நான்காம் திகதி உயிலங்குளத்தில் நடந்த மாட்டு வண்டிச் சவாரியே காரணமாக இருந்ததாக பரவலாகத் தெரிவிக்கப்படும் நிலையில் உயிலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இது குறித்து கூர்மை கேள்வி எழுப்பிய வேளை அவர் அதனை முற்றாக மறுத்தார்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் உட்பட உயிலங்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும், நொச்சிக்குளம் கிராமவாசிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக பகைமை நிலவி வருவதாகவும், இருதரப்பினருக்கும் இடையிலான பகைமை தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் பல விசாரணைகள் நடைபெற்று, அது தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த நீண்ட காலப் பகைமையே படுகொலையில் முடிந்துள்ளதாகவும் உயிலங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளம் கிராமங்களுக்கிடையிலான நீ்ண்ட காலமான பகைமை தொடர்பில் உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கூர்மை விபரம் கோரியபோது, தான் அந்த நீண்ட கால பகைமை தொடர்பில் யாதும் அறியேன் என்றும், இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஆரம்பத்தில் பகைமை மூண்டபொழுது உயிலங்குளத்திற்கு என பிரத்தியேக பொலிஸ் நிலையம் இருக்கவில்லை எனவும், உயிலங்குளம் மற்றும் அதனோடு இணைந்த கிராமங்கள் அனைத்தும் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்ததினால் குறித்த நீண்ட காலப் பிணக்கு தொடர்பில் மன்னார் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றிலும் அது தொடர்பில் வழக்கினை தாக்கல் செய்ததாகவும், இதனால் குறித்த பிணக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் நொச்சிக்குளம் மற்றும் அதன் அயல் கிராமவாசிகளிடம் குறித்த பிணக்கு தொடர்பில் விபரம் கேட்டபொழுது, நொச்சிக்குளம் கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக சிறுபோக நெற்செய்கைகளை மேற்கொண்ட பொதுவான புலவு காணிகள் உயிலங்குளத்தைச் சேர்ந்த சிவரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு வாள் வெட்டில் கொல்லப்பட்டவர்களின் பின்புலமும் ஆதரவும் இருந்ததாகவும், இந்த நிலையி்ல் நொச்சிக்குளம் மக்கள் குறித்த புலவு காணி தொடர்பில் தமக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதாக கருதி கடுமையான அதிருப்தியில் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே கொலைச் சம்பவம் நடந்ததாக பொலிஸாரும் கருதுகின்றனர்.

இது இவ்விதம் இருக்க, கடந்த வெள்ளி காலை நொச்சிக்குளம் பகுதியில் நிகழ்ந்த குறித்த படுகொலை சம்பவம் மன்னார் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இக் கொலை சம்பவத்தையடுத்து மன்னார் நொச்சிக்குளம் கிராம மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவும் நிலையில், அக்கிராமத்தில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தொடக்கம் அச்சம் காரணாக தமது கிராமத்தை விட்டு வெளியேறாது வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்திற்குள் வெளியார் செல்வதற்கும் இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் நொச்சிக்குளத்தில் இருந்து தலைமறைவான சந்தேக நபர்களை உயிலங்குளம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் வலை வீசி தேடிவருகின்றனர்.