ஜெனீவா ஐம்பதாவது கூட்டத் தொடரில்

பீரிஸின் திரிபுபடுத்திய ஜெனீவா உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

வெளியுறவு அமைச்சரின் உருவப் பொம்மை எரிப்பு- எதிர்ப்பு மனுவும் கையளிப்பு
பதிப்பு: 2022 ஜூன் 19 14:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 14:53
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவப் பொம்மையை எரித்து யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் ஐம்பதாவது அமர்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஐ.நா.விடம் கையளிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளில் தொடர்புடைய குடும்பங்களில் 83 வீதத்துக்கும் அதிகமானவா்களைச் சந்தித்து விபரங்களை உறுதிப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுள்ளதாகத் திரிபுபடுத்திக் கூறியிருந்தார்.
 
அத்துடன் 92 சதவீதமான காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதென்றும். பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு இருபத்து இரண்டு இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் திரிபுபடுத்தியிருந்தார்.

இதனைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சிவில் சமூக பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

முற்பகல் 10.30க்கு நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் கோவில் வீதியில் உள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்குப் பேரணியாக வந்தடைந்தனர்.

அதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், அமைச்சரின் உருவப்படத்தைத் தீயிட்டும் கொளுத்தினர்.

போராட்டத்தின் நிறைவில், போராட்டக்காரர்கள் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்குத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

சிவில் சமூக பொது அமைப்புகள் கையளித்த ஆங்கில மனுவின் உள்ளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:

வட-கிழக்கு பொது அமைப்புகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் முன்வைக்கும் வேண்டுதல் மனு: பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்காகச் சர்வதேச விசாரணையைக் காவு கொடுக்க வேண்டாம். இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 50ஆம் அமர்வில் 13 ஜூன் 2022 அன்று ஆற்றிய உரையில் சொல்லியிருந்த அப்பட்டமான, உள்நோக்கத்துடனான பொய்களை தமிழர்கள் கண்டிக்கிறார்கள்

இலங்கைத் தீவின் வட-கிழக்கைத் தழுவிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் பொது அமைப்புகளாகிய கீழே கையெழுத்திட்டிருக்கும் அமைப்புகளைச் சேர்ந்தோராகிய நாம் யாழ்ப்பாணத்தில் 19 ஜூன் அன்று அமைச்சர் பீரிஸின் மேற்படி உரையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காகக் கூடியபோது தங்களுக்கு முன்வைத்துள்ளோம்.

அமைச்சரின் குறித்த அறிக்கையிடல் ஐ.நா. உருவாக்கியுள்ள ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46-1 தீர்மானத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளியகப் பொறிமுறையை ஐ.நா.வே இல்லாது ஆக்கிவிடும் தீய உள்நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதை நாம் வெளிப்படையாகக் கண்டிப்பதற்காகவே ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடுகிறோம்.

தனது ஜெனீவா உரையில், 46-1 தீர்மானம் தொடர்பாகப் பேசுகையில், இலங்கைத் தீவில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் பொருளாதார இடர் நீக்கத்தையும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களைக் கோரியவையாகவுமே இருப்பதாகச் சுட்டிப் பேசியதன் மூலம், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஏதோ தமிழ்மக்கள் இலங்கை அரசு தம்மீது இழைத்த இன அழிப்பு உட்பட்ட பெரும் சர்வதேச நீதி தொடர்பான போராட்டங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தற்போது குறைத்துவிட்டார்கள் என்ற தொனிப்பொருளை திரிபுநோக்கத்தோடு முன்வைத்திருக்கிறார்.

ஆனால், உண்மை நிலை அவர் சொன்னது போன்றதல்ல என்பதை யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தோடு தங்களுக்கு மீள்வலியுறுத்தித் தெரிவிக்க விரும்புகிறோம்.

இலங்கை அரசு இனப் பிரச்சனையை நெடுங்காலமாகத் தீர்க்காதிருந்தமையால் திரட்சி பெற்ற சிக்கலின் ஒரு விளைவாகவும் சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான தண்டனையிலிருந்து தொடர்ந்தும் தான் தப்பித்துக்கொள்ளும் தன்மையைப் பேணிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட ஒரு விளைவாகவும் தற்போது எழுந்துள்ள பொருளாதாரச் சிக்கலை வட-கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

உள்ளார்ந்த இனப்பிரச்சனைக்கான தீர்வின் மூலமும், கடந்த காலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை சுயாதீன சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலமுமே தேவைப்படும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கூட இங்கு எய்த முடியும்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், மீண்டும் இந்தத் தீவில் எந்தவொரு தேசத்துக்கோ, மக்களுக்கோ, சமூகத்துக்கோ, சிறுபான்மைக்கோ இன அழிப்பு மற்றும் எந்தக் கன்மபாதகக் குற்றங்களும் நடைபெறாதிருத்தலை உறுதிப்படுத்துவதற்கும் கடந்தகாலக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் முக்கியமானது.

ஆகவே, தற்போதைய பொருளாதாரச் சிக்கலுக்கான தீர்வைக் காண்பது எந்தளவு முக்கியமோ அதேபோல தமிழர்களதும் ஏனையோரதும் கூட்டு உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வைக் காண்பதென்பதும் முக்கியமானது.

இதற்கும் அப்பால், தான் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த அனைத்து விடயங்களிலும் அமைச்சர் முற்றிலும் தவறான பொய்த் தகவல்களையே வழங்கியிருக்கிறார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் வெற்றுச் சோடினையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் எதுவும் நீண்டகாலம் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளுக்கு எந்தவித பலனையும் தரவில்லை.

இலங்கை இராணுவத்தினதும் அதன் முகவர்களதும் கைகளால் வலிந்து காணாமற் செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர், அவர்கள் குறித்த எந்தப் பதிலையும் அரசு வழங்காத நிலையில், இன்னும் தமது அன்புக்குரியோரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகள் வலிந்துகாணமலாக்கப்பட்டது தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அழிப்பு நடவடிக்கை என்றே குடும்பத்தினர் அனைவரும் கருதுகின்றனர்.

எமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி 15 ஜனவரி 2021 அன்று தயாரித்திருந்த கூட்டுக் கோரிக்கையில் இன அழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார்கள். அதைப்போலவே, உண்மையான ஒரு பக்கசார்பற்ற, சுதந்திரமான சர்வதேச ஆதாரத் திரட்டலுடனான பொறிமுறையையும் கோரியிருந்தார்கள்.

;இன அழிப்புக் குற்றத்தை ஆராய ஐ.நா. இதுவரை தவறியுள்ளதையிட்டு நாம் கவலை கொண்டுள்ளோம். 46-1 எனும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆதாரப் பொறிமுறையை மட்டுமே கொண்டுவந்தது.

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகள் 46-1 தீர்மானத்தின் இயங்குவிதி ஆறைச் சரியாகவே பொருள் கோடல் செய்துள்ளார் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்ளும் அதேவேளை, தமிழர்கள் முழுமையான ஒரு சர்வதேச, பக்கசார்பற்ற, சுயாதீன விசாரணைப் பொறிமுறையையே அடுத்த தீர்மானத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இன அழிப்பு என்ற குற்றத்தைக் கண்டறிவதற்கான ஆணையையும் அடுத்த தீர்மானம் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை சர்வதேச நீதியோடு பண்டமாற்றம் செய்ய ஐ.நா.தொகுதி அனுமதியளிக்கக்கூடாது என்றும் வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.