வடமாகாணம் மன்னார்

நொச்சிக்குளம் இரட்டைக்கொலை குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

பொதுமக்களின் தகவல்களும் பெறப்படுகின்றன
பதிப்பு: 2022 ஜூன் 21 21:34
புதுப்பிப்பு: ஜூன் 23 14:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பான புலன் விசாரணைகள் அனைத்தும் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சி.பி. ஜெயதிலக்க கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். குறித்த பொலிஸ் பிரிவினரால் கடந்த 15ஆம் திகதி முருங்கன் காட்டுப்பகுதியில் இருவரும், கடந்த 16ஆம் திகதி யாழ் நகரில் ஐவரும் என இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மன்னார் நொச்சிக்குளத்தில் கடந்த 10ஆம் திகதி நிகழ்ந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன், நால்வர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தில் நாற்பது வயதான யேசுதாசன் றோமியோ, முப்பத்து மூன்று வயதான யேசுதாசன் தேவதாஸ் ஆகிய உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தையடுத்து மேற்கொள்ளபடும் பொலிஸ் புலன் விசாரணைகள் தொடர்பாக கூர்மைச் செய்தித் தளம் மன்னார் பொலிஸ் நிலையத் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சி.பி. ஜெயதிலக்கவிடம் விவரம் கோரியபோதே, அவர் இவ்வாறு தகவல் வழங்கினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

சம்பவம் தொடர்பாக உயிலங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்தில் நொச்சிக்குளம் கிராமவாசிகள் உட்பட 21 க்கும் மேற்பட்டவர்கள் சந்தேக நபர்களாகப் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டனர்.

நொச்சிக்குளத்தைச் சேர்ந்த பலர் தலைமறைவாகியதுடன், அவர்களில் அதிகளவானோர் முருங்கன் பிரதேச காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்ஷான் நாஹாகவத்தையின் உத்தரவின்பேரில், இக் கொலைச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் உயிலங்குளம் பொலிஸாரிடம் இருந்து, மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பணியகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த படுகொலைகள் தொடர்பில் புலன் விசாரணைகளைத் திறம்பட முன்னெடுக்கும் வகையில் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பணியகத்தின் புதிய பொறுப்பதிகாரியாக, தலைமன்னார் பொலிஸ் நிலையத் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் ஆர்.டீ.எம்.சிறில் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்ஷான் நாகவத்தையினால் கடந்த 13ஆம் திகதி நியமிக்கப்பட்டார் என மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பணியகத்தின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் ஆர்.டீ.எம் சிறில் தலைமையிலான 20ற்கும் மேற்பட்ட பொலிஸார், நொச்சிக்குளத்தில் கொல்லப்பட்ட இரண்டு சகோதரர்களின் படுகொலை தொடர்பான தீவிர புலன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இரட்டைக்கொலை தொடர்பான 17 சந்தேக நபர்களின் புகைப்படங்களை சேகரித்த மேற்படி பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பணியக அதிகாரிகள், படுகொலை தொடர்பாக தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்காக முருங்கன் உயிலங்குளம் மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் சீருடையின்றி சிவில் உடைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் நடமாட்டம் தொடர்பாக பொது மக்களின் தகவல்களும் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டன. இதனால், தலைமறைவாகிய சந்தேக நபர்களில் இருவரை கடந்த 16ஆம் திகதி முருங்கன் கற்கிடந்தகுளம் பகுதியில் வைத்து பிரதம இன்ஸ்பெக்டர் ஆர்.டீ.எம் சிறில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த சகோதரர்களின் படுகொலை தொடர்பாக சந்தேக நபர்களான நொச்சிக்குளம் கிராமவாசிகள் பலர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் மறைந்திருப்பதாக மன்னார் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து பிரதம இன்ஸ்பெக்டர் ஆர்.டி.எம். சிறில் தலைமையிலான மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பணியகத்தினர் அவர்களை கைது செய்வதற்காக கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தனர்.

எனினும் யாழ் வட்டுக்கோட்டையில் மறைந்திருந்த கொலைச் சந்தேக நபர்கள் தம்மைக் கைது செய்வதற்கு பொலிஸார் யாழ்ப்பாணம் வருவதை அறிந்து கொண்டுள்ளதுடன், அங்கிருந்து தப்பியோடி யாழ்ப்பாணத்தில் வேறு பகுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

புதிய மறைவிடமொன்றைத் தேடி அங்கு செல்லும் வரை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகாமையில் பொதுமக்கள் அதிகம் காணப்பட்ட பூங்கா ஒன்றில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் விரைந்த பொலிஸார், தமக்கு கிடைக்கப்பெற்ற பிறிதொரு இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்கள் வட்டுக்கோட்டையில் இருந்து வெளியேறி யாழ் கோட்டைக்கு அருகில் உள்ள பூங்காவிற்குள் நுழைந்துள்ள செய்தியை அறிந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பூங்காவிற்கு சென்ற பொலிஸார், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களுக்கு மத்தியில் கலந்திருந்த ஐந்து சந்தேக நபர்களை பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் கைது செய்துள்ளனர்.

இக் கைது நடவடிக்கை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு மன்னார் பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் யாழ் நகரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் விசாரணைகளுக்காக மன்னாருக்கு அழைத்து வரப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் கடந்த 17ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 16ஆம் திகதி முருங்கன் கற்கிடந்தகுளம் பகுதியில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை 17ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் சி.பி. ஜெயதிலக்க தெரிவித்தார்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த பத்தாம் திகதி காலை நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் கத்திகள் போன்ற ஆயுதங்கள் உட்பட தடயப்பொருட்கள் பலவற்றைத் தாம் மீட்டுள்ளதாக, மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.