இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

அடுத்த ஆண்டு மேலும் நெருக்கடி- 2026 வரை 28 பில்லியன் டொலர்களைக் கடனாகச் செலுத்த வேண்டும் என்கிறார் ரணில்

கூச்சல் குழப்பத்தினால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச
பதிப்பு: 2022 ஜூலை 05 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 06 02:29
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைத்தீவு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் 2023 ஆம் ஆண்டுவரை தொடருமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழழை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு இருந்த முன்னைய நிலைமைக்குச் செல்ல 2026 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமென்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இந்த ஜூன் மாதம் மூவாயிரத்து 489 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டும், அத்துடன் 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை 28 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் கடன்களை ஓரளவு மறுசீரமைக்க முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
 
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சு நடத்தியது. அந்தப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக அரசாங்கம் பரிசீலிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்குச் சமூகமளித்தமையினால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். பதவி விலகி கோட்டாபயவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரக்கச் சத்தமிட்டனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டது. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தார். எதிர்கட்சிகளின் எதிர்ப்புத் தொடர்ந்தமையினால் கோட்டாபய ராஜபக்ச சபையில் இருந்து வெளியேறினார்.

சபை நடவடிக்கைகளும் சிறிது நேரம் இடை நிறுத்தப்பட்டன.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் உரை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சா டி சில்வா, பிரதமர் உறுதியளித்த போதிலும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைத்தீவின் கடன்களை மறுசீரமைக்க முடியாதெனச் சுட்டிக்காட்டினார்.

ஓகஸ்ட் மாதத்திற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இந்த கடனை மூன்று வாரங்களில் மறுசீரமைக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்குரிய திட்டம் கோட்டா, ரணில் அரசாங்கத்திடம் இல்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

பெட்ரோல் - டீசல் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தீர்வு எங்கே, தோட்டத் தொழிலாளர்களுக்கு தீர்வு எங்கே, ஏற்றுமதி துறையின் வீழ்ச்சிக்குத் தீர்வு என்ன என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.