இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு

கோட்டாபய, ரணில் ஆகியோருக்கு எதிராகக் கொழும்பில் தொடர் போராட்டங்கள்- சனியன்று பேரணி

முல்லைத்தீவுச் செயலகத்தில் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பிரதிநிதிகள் உரையாடல்
பதிப்பு: 2022 ஜூலை 06 23:21
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 07 01:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி கொழும்பில் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பாகவும் நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாகவும் புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலகமடக்கும் பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தடுத்தனர். ஆனாலும் போராட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஒன்பதாம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பேரணியில் அனைவரையும் பங்கொள்ளுமாறு இலங்கையின் மூத்த சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த சட்டத்தரணி சிறிநாத் பெரேரா, கோட்டாபய ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு மக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

எரிபொருட் தட்டுப்பாடுகளினால் கொழும்புநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது நாளை வியாழக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையால் சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்தது.

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி, எரிபொருட் தட்டுப்பாடு போன்றவற்றினால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பிரச்சினைகள், விவசாய, விலங்கு வேளாண்மை உற்பத்திகளின் தற்போதைய நிலை, இவற்றுக்கு இருக்கின்ற பிரதானமான தடைகள் தொடர்பாக ஐ.நா பிரதிநிதிகள் கேட்டு அறிந்து கொண்டதாக அரச அதிபர் விமலநாதன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் இலங்கை விவசாய அமைச்சின் அதிகாரிகள், யுனிசெப் நிறுவனப் பிரதிநிதி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் உதவிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாயப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்குபற்றினர்.