இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினை

கொழும்பில் இராணுவம் குவிப்பு- போராட்டங்களைத் தடுக்க அரசாங்கம் கடும் முயற்சி

அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச மற்றும் தனியார் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கூட்டு ஏற்பாடு
பதிப்பு: 2022 ஜூலை 07 22:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 08 00:36
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பில் ஒன்பதாம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்துக்கு எதிராகக் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தை பொலிஸ், மற்றும் இராணுவத்தினரைப் பயன்படுத்தித் தடுக்க முற்பட்டால் போராட்டம் வெடிக்குமென தொழிற்ச் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதிப் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலக வேண்டுமென வலியுறுத்தி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடைபெறவுள்ள போராட்டத்தினால், பொதுமக்கள் பாதிக்கப்படவுள்ளதாக் குறிப்பிட்டு அந்தப் போராட்டத்தைத் தடுக்குமாறு கோரி கோட்டைப் பொலிஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 
இந்த நிலையில், வெளி மாகாணங்களில் இருந்து மேலதிகமாக எண்ணாயிரம் பொலிஸாரையும் ஐயாயிரம் இராணுவத்தையும் அரசாங்கம் கொழும்பு நகருக்குள் வரவழைத்துள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை, ஒன்பதாம் திகதி அமைச்சர்கள், அரசதரப்பு உறுப்பினர்களின் வீடுகளுக்குப் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபடுவோர் அரச மற்றும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாதென்றும், அவ்வாறு சேதங்கள் விளைவித்து வன்முறைகளிலும் ஈடுபட்டால், பொலிஸார் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமெனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச மற்றும் தனியார்துறை தொழிற் சங்கங்கள், வர்த்தகர் சங்கம். தனியார் பேருந்துச் சங்கம் மற்றும் பொது அமைப்புகள் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்குகொள்ளவுள்ளன.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்படுமென சிற்றூண்டிச்சாலைகளின் உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு நகரில் வியாழக்கிழமை மாலை முதல் கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் களனி பாலம், தெஹிவளைச் சந்தி, நுகேகொடச் சந்தி உள்ளிட்ட பிரதான சந்திகளில் விசேட சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓன்பதாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளைப் பிரதேசத்தில் பௌத்த குருமார் வியாழக்கிழமை மபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சனிக்கிழமை வரையும் அந்தப் போராட்டம் தொடருமெனவும் பிக்குமார் அறிவித்துள்ளனர்.