இலங்கைத்தீவில் தொடரும் நெருக்கடி

சனிக்கிழமை போராட்டத்தை அடக்க ஊரடங்குச் சட்டம் அமுல்- மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்

கோட்டாபய ராஜபக்சவின் மாளிகை முன்பாகப் பொலிஸார் மாணவர்கள் மோதல்
பதிப்பு: 2022 ஜூலை 08 22:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 09 02:28
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் நாளை சனிக்கிழமை இரவு வரை தொடர்ச்சியாக நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க இலங்கைப் பொலிஸ் தலைமையகம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. கொழும்பு களனி பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, புறக்கோட்டை, கோட்டை பிரதேசங்கள் ஊடாக ஜனாதிபதி மாளிகையை நோக்கி வந்தபோது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதனையும் பொருட்படுத்தமால் இரவு ஏழு மணிக்கு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலை அண்மித்த தூரத்தில் மாணவர்கள் வந்தபோது, கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் நீர்த்தாரைகளையும் மாணவர்கள் மீது பிரயோகித்தினர்.
 
கொழும்பு போராட்டம்
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் போராட்டம் நடத்தி வரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் மதகுருமார் நள்ளிரவில் வீதியில் படுத்துறங்கும் காட்சி இது. போராட்டம் ஒன்பதாம் திகதி சனிக்கிழமை ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஏற்பட்ட மோதல்களையடுத்தே இன்று வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை நோக்கி வந்த மாணவர்கள் இன்றிரவு கோட்டைப் பிரதேசத்தில் தங்கி நாளை சனிக்கிழமை முழுநாளும் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர்.

ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள், பௌத்த குருமார் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கோட்டைப் பிரதேச வீதிகளில் தங்கியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

பொலிஸார் அவர்களைக் கலைக்க முற்பட்டபோதும் மாணவர்கள் நள்ளிரவு வரையும் அங்கு தங்கியுள்ளனர். இதேவேளை கோட்டை விகாரைக்கு முன்பாக பௌத்த குருமார் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டமும் நள்ளிரவு வரை தொடர்ந்தும் நடைபெறுகின்றது.

வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பு நகரும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில் பிற்பகல் ஆரம்பித்த மாணவர்களின் பேரணியைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்கள் நடவடிக்கைகள் பதற்றத்தை எற்படுத்தியுள்ளன.

கொழும்பு நகரில் முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கைப் பொலிஸாருக்குரிய சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு சட்டவிரோதமானது மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலபட்ட பென்டி ஆகிய இருவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.