ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட நிலையில்

பதவி விலகவுள்ளதாக கோட்டாபய சபாநாயகருக்கு அறிவித்தார்- சர்வகட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரை- ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேருக்குக் காயம்
பதிப்பு: 2022 ஜூலை 09 22:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 09 23:42
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அலரி மாளிகை போன்றவற்றை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளதால், எதிர்வரும் புதன்கிழமை 13 ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இத் தகவலை சபாநாயகர் சனிக்கிழமை இரவு ஊடகங்களுக்கு அறிவித்தார். சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், சனிக்கிழமை காலை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டு பிற்பகல் கைப்பற்றினர். ஆனால் கோட்டாபய ராஜபக்ச அங்கிருக்கவில்லை. அவர் ஏலவே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடமொன்றுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
 
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் சனிக்கிழமை உச்சமடைந்து, ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றுமளவுக்குப் பெருந்திரளான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து பேரணியாக சனிக்கிழமை காலை கொழும்பு கோட்டைப் பகுதியை வந்தடைந்தனர்.

கொழும்பு நகரில் முப்படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில், முப்படை மற்றும் பொலிஸார் ஏலவே அமைத்திருந்த பாதுகாப்பு வேலிகளையும் உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு உள்ளே சென்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து இருநூறு மீற்றர் தூரத்தில் உள்ள ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பற்றினர்.

பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் அதற்குரிய பாதுகாப்புக் கவசங்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் தர்க்கப்பட்டுப் பின்னர் கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தும் வாகனத்தையும் கைப்பற்றினர்.

இதனால் பொலிஸாரும் முப்படையினரும் பாதுகாப்பு வேலிகளைக் கைவிட்டு விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதனையடுத்து போராட்டக்காரர்கள் உள்ளே சென்று இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றி ஆர்ப்பரித்தனர்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டுமென்ற பிரகடனம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து போராட்டக்காரர்களினால் முன்று மொழிகளிலும் வாசிக்கப்பட்டது.

அதேவேளை, சனிக்கிழமை மாலை மற்றுமொரு பகுதி போராட்டக்காரர்கள் கொள்பிட்டி காலி வீதியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலரி மாளிகையை முற்றுகையிட்டனர். பொலிஸாரின் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு சுவர்கள் மீது ஏறி அலரி மாளிகை வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் சென்றனர்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அங்கிருக்கவில்லை. அதனால் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை முற்றுகையிட்டனர். இதனால் பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

ஊடகவியலளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் நான்கு ஊடகவியலாளர்கள் படுகாயமடைந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் போராடிய போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குத் தீயிட்டனர்.

இல்லம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களினால் கொழும்பு நகரம் சனிக்கிழமை போர்க்களமாக மாறியது.

இதேவேளை, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றிய பின்னர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவாத்தன தலைமையில் சூம் மூலம் நடத்தப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமெனவும், பதில் ஜனாதிபதியாக அரசியல் யாப்பின் பிரகாரம் சபாநாயகர் பதவி ஏற்க வேண்டுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானங்கள் எழுத்து மூலம் கோட்டாபய ராஜபக்சவுக்கு சபாநாயகரினால் அனுப்பப்பட்டுள்ளது. சர்வகட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக பதவி விலகத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை வரையும் அவர் காலஅவகாசம் கோரியுள்ளார்.