பதவி விலக கோட்டாபய ராஜபக்ச கால அவகாசம் கோரிய நிலையில்

காத்திருக்க முடியாதென போராட்டக்குழு அறிவிப்பு- பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் கூறும் காரணம்

ஜனாதிபதி மாளிகைக்கு அருகாக காலிமுகத்திடலில் இராணுவம் குவிப்பு- ஆனால் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
பதிப்பு: 2022 ஜூலை 10 23:52
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 11 01:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் உடனடியாக விலக வேண்டும். எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை காத்திருக்க முடியாதென காலிமுகத் திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது. ஒன்பதாம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டம் மற்றும் அதன் பிரகடனத்தின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டுமெனவும் கேட்டுள்ளனர். எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உடனடியாகப் பதவி விலக வேண்டுமென போராட்டக்குழு அறிவித்துள்ளது.
 
ஜனாதிபதி
ஜனாதிபதி மாளிகைக்கு அருகாக காலிமுகத்திடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இராணுவத்தினர் வாகனத்தில் இறங்கி நடந்து செல்வதாகக் குறிப்பிட்டுச் சமூக வலைத்தளங்களில் வெளியான சில படங்கள் இவை. இதனை இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஊடகவியலாளர்கள் மற்றும் சில பிரமுகர்களைச் சந்தித்து உரையாடிய ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யும்வரை பதவி விலக முடியாதெனக் கூறியிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி எரிபொருட்களையும் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதியுதவிகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாகவும் இதனால் தற்போதைக்குப் பதவி விலக முடியதெனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டமை குறித்த உரையாடல்களின்போது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு அருகாக காலிமுகத் திடல் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ள காலிமுகத் திடல் போராட்டக்குழு, அங்கு இரவுபகலாகத் தங்கியுள்ளது. இந்த நிலையிலேயே இரண்டு வாகனங்களில் இலங்கை இராணுவத்தினர் காலிமுகத் திடலில் இறங்கி ஜனாதிபதி மாளிகை நோக்கி நடந்து செல்வதாக சமூகவலைத் தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை இரவு மறுப்பு வெளியிட்டுள்ளது. இருந்தாலும் இராணுவத்தினர் நடந்து செல்லும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

உரிய திகதியில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால், நாடுமுழுவதும் வேலைநிறுத்தம்(ஹர்த்தால்) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்படுமெனவும் கூறியுள்ளனர்.

கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு பகிரங்கமாகக் கூறினார்.