கோட்டா. மகிந்த ஆகியோருக்கு எதிராக மக்கள் எழுச்சி கொண்டமைக்கான காரணம்-

சிங்கள - பௌத்த தேசிய சக்தி, ராஜபக்ச குடும்பத்திடம் இல்லாமல் போனதாலேயே துரத்தப்பட்டதாக மார் தட்டுகிறார் ஓமல்பே தேரர்

பௌத்த தலைமைத்துவம், சிங்கள பௌத்த அதிகாரம் நிலையானது என்றும் வியாக்கியானம் செய்கிறார்
பதிப்பு: 2022 ஜூலை 12 15:15
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 13 00:04
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாதொழிக்க முடியாது. அது நிலையானது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிங்கள,பௌத்த அதிகாரம் நிலையானது. என்பதே யதார்த்தமான உண்மையும்கூட என்று கூறிய தேரர், சிங்கள, பௌத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததாகவும், அதனாலேயே அவரைப் பதவி விலக வைப்பதற்குச் சிங்கள, பௌத்த சக்திகள் முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவித்தார். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்ததேசிய சக்தி இத்துடன் முடிந்துவிட்டதாகவும் தேரர் கூறினார்.
 

ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான சிங்களத் தொழில் அதிபர் ஒருவரின் அததெரன என்ற சிங்களத் தொலைக்காட்சி, தேரர் செய்தியாளர்களிற்கு கூறிய கருத்துக்களை செவ்வாய்க்கிழமை பிரதான செய்தியில் அப்படியே வெளியிட்டிருந்தது.

தொழிற்சங்க பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இணைந்து கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாகத் தேரர் இவ்வாறு விளக்கமளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவர் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும், மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளுக்கும் ஓமல்பே சோபித தேரர் தலைமைத்துவம் வழங்கியிருந்தார்.

ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக மகாசங்கத்தினர் செங்கடகல பிரகடனத்தை வெளியிடுவதிலும் முன்னின்று செயற்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட ராமன்ய நிக்காய, அமரபர நிக்காய பௌத்த பீடங்களின் முக்கிய பிரமுகரான ஓமல்பே சோபித தேரர், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகச் சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் வகிபாகம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

தேரர் கூறிய விடயங்கள் பின்வருமாறு;-

சிங்கள பௌத்த தலைமைத்துவம், சிங்கள பௌத்த அதிகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத்தீவில் சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாது செய்ய முடியாது. அது நிலையானது.

கோட்டாபய ராஜபக்விடம் இருந்த சிங்கள, பௌத்த அதிகாரச் சக்தி இல்லாமலே போய்விட்டது. அதனால்தான் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஏனைய இன மத மக்களின் முழு ஒத்துடைப்புடனேயே சிங்கள, பௌத்த சக்தியால் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏனைய இன, மத மக்களின் பூரண பங்களிப்புடன் சிங்கள, பௌத்த சக்திதான் செயற்படுகின்றது என்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்ததேசிய சக்தி இத்துடன் முடிந்துவிட்டது.

ஆகவே இனிமேலும் ஏமாந்துவிடக்கூடாது என்று ஓமல்பே சோபித தேரர் கூறினார்.

ஜனாதிபதி பதவி விலகியதும் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உட்பட போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள அரச வளங்கள் மீளவும் உரிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் கட்சி அதிகாரப் போட்டியை கைவிடுத்துச் சர்வக்கட்சி அரசாங்கத்துக்காகக் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். அவ்வாறு வரமுடியாவிட்டால் தகுதியான நபரை நியமிக்க பௌத்த பீடங்கள் தயாராக இருப்பதாகவும் ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்தார்.