இலங்கைக்கு

சீனாவிடம் கடனுதவிகள் பெறுவதற்கான பேச்சுக்கள் தொடருவதாகக் கூறுகிறார் பாலித கோகண

கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதெனவும் தெரிவித்துள்ளார்- ரணில் சீனாவுக்குப் பயணம் செய்வார்
பதிப்பு: 2022 ஜூலை 26 10:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 16:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சீனாவுக்குப் பயணம் செய்வாரெனவும், சீனா தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது என்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோகண தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவைக்குப் பாலித கோகண இவ்வாறு தெரிவித்துள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் சீனா உதவ வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவித் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்றும் பாலித கோகண கூறியுள்ளார்.
 
ஜப்பானும் சீனாவுமே இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கிய நாடுகள். தற்போது கடனில் பத்துவீதத்தை இலங்கை சீனாவிற்குச் செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருபத்து இரண்டு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கை, தற்போது அந்நியச் செலாவணியை முற்றாக இழந்துள்ள நிலையில், பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், பாலித கோகண பீஜிங்கில் வைத்து ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரித்துள்ளார்.

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள வேறு பல நாடுகளிற்குச் சீனா உதவவேண்டிய நிலையில் இருந்ததாலேயே, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது சீனா உடனடியாக நிதியுதவி வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இலங்கை மாத்திரம் பாதிக்கப்பட்டிருந்தால், சீனா விரைவாகத் தீர்மானம் எடுத்து இலங்கைக்கு நிதியுதவி வழங்கியிருக்கும் என்றும் பாலித கோகண தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீனாவின் பங்களிப்பு முக்கியமானது. இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய நாடு சீனா என்ற தொனியிலும் பாலித கோகண விபரித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள பாரிய சீனா ஆதரவுடனான துறைமுக திட்டங்களில் சீனா மேலும் முதலீடு செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புதியவர் அல்ல. 2016 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஆகவே புதிய அரசாங்கத்தின் சீனா தொடர்பான கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என பாலிதகோகண தெரிவித்தார்.

இலங்கைக்குக் அதிகளவு வருமானம் ஈட்டித்தரும் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதித் தொழிற்துறைக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்குச் சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் கடனுதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான பேச்சுக்கள் தொடருவதாகவும் பாலித கோணன மேலும் தெரிவித்தார்.