இலங்கைத்தீவின் ஸ்திரமற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி

போரினால் பெறமுடியாத ஈழத்தைப் பெற, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாக ஐக்கிய போர் வீரர்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கம்
பதிப்பு: 2022 ஜூலை 29 21:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 30 00:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
முப்பது வருடங்களுக்கும் மேலான போரினால் பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் ஈழத்தை, இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திப் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெற முயற்சிப்பதாக ஐக்கிய போர் வீரர்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார். போரில் உயிர்த் தியாகம் செய்த இலங்கைப் படைவீரர்களை நினைவு கூரும் மே மாதம் 18 ஆம் திகதியன்று, கொழும்பு காலிமுகத்திடலில் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளை நினைகூர்ந்ததாகவும், கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவரும் சில தமிழ் இளைஞர்களும் அதில் ஈடுபட்டதாகவும் அசேல தர்மசிறி கூறியுள்ளார்.
 
கண்டியில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணிகள் பற்றி அசேல தர்மசிறி விளக்கமளித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈழத்தை வென்றெடுப்பதற்காக அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்ட சில அருட் தந்தைகளைக் காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் காணக்கூடியதாக இருந்ததென்றும் அதற்கு ஆதாரமாகப் படங்கள் இருப்பதாகவும் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார்.

இச் செயற்பாடுகளினாலேயே கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல நேரிட்டதாகவும், புலம்பெயர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த காலிமுகத்திடல் போராட்டத்தில் பௌத்த குருமார் சிலர் பங்குபற்றியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

போராட்டத்தினால் இலங்கையை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டு சென்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும். முப்பத்து இரண்டு ஆண்டுகள் இடம்பெற்ற போராட்டத்தில் இருபத்து ஏழாயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளதாகவும், அறுபத்து நான்காயிரத்து ஐநூறு படையினரில் பதின் நான்காயிரத்து ஐநூறு பேர் வாழ் நாள் முழுவதும் அங்கவீனமாகியுள்ளதாகவும் அசேல தர்மசிறி தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கப் போராடவில்லை. ஆனால் இன்று பல சிங்கள இளைஞர்கள் ஈழத்துக்காகப் போராடுகிறார்கள். புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் குற்றம் சுமத்திய அவர், ஜனாதிபதிப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவையும் துரத்திவிட்டு, யாரை ஜனாதிபதியாகப் போகிறார் சரத் பொன்சேகா எனவும் கேள்வி எழுப்பினார்.