2009 இன் பின்னரான அரசியல் சூழலில்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கை

அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வழங்குமாறும் வலியுறுத்தல்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 03 22:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 01:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்புகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது. காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் பங்குபற்றியிருந்தார். இச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றது. கூட்டமைப்பு முன்வைத்த முக்கியமான சில கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கும் தெரிவித்தார். ஆனால் எந்த வகையான அரசியல் தீர்வு என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே தெரிவிக்கவில்லை.
 
இச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுகவீனம் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பதற்குப் பரிசீலித்தாலும், சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை என்று சந்திப்பில் கலந்துகொண்ட புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கியமான அன்றாடப் பிரச்சினைகள் தொடா்பாக விளக்கமளிக்கப்பட்டது என்றும் சித்தாத்தன் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதித் தெரிவின்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்ததாகச் சுட்டிக்காட்டினார். ஆனால் அதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தனக்கு வாக்களித்திருந்ததாகக் கூறினார்.

எனினும் அதனை மறுத்த சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுத்த முடிவுக்கு அமைவாக அனைத்து உறுப்பினர்களும் டளஸ் அழகபெருமாவுக்கே வாக்களித்ததாகக் கூறினார்.

இருந்தாலும் இந்த உரையாடல்களைப் பொருட்படுத்தாமல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறியதாகச் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்குக் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியுமெனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ள முக்கியமான கோரிக்கைகள் பின்வருமாறு;-

புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட பாரம்பரியக் காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும், பலாத்காரமாக முகாம் அமைத்திருக்கும் இலங்கை இராணுவத்திற்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் நோக்கில் நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.

தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.

வடக்கு கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றித் தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.

நீண்டகாலமாகச் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட சில தொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது உள்ளிட்டவையே முக்கியமான கோரிக்கைகளாகும்.

அதேவேளை புதன்கிழமை முற்பகல் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினார்.