இறுதிப் போர் இடம்பெற்ற

முல்லைத்தீவு வட்டுவாகலில் படை முகாமை நிரந்தரமாக்கக் காணி அபகரிப்பு - இழப்பீடுகளை ஏற்க மக்கள் மறுப்பு

உரிமையாளர்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்- அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 24 09:48
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 11:41
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. வடமாகாணம் முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை முகாமுக்காக மக்களின் காணிகளை அளவிடும் பணிகள் பொது மக்களின் எதிர்ப்பினால் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது. நில அளவீட்டுக்காக சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் காணி அபகரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சம்பவ இடத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான அறு நூற்றுப் பதினேழு ஏக்கர் நிலங்களை பதின்மூன்று வருடங்களாக ஆக்கிரமித்துப் பாரிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளைக் கடந்த சில வருடங்களாகப் படை முகாமை நிரந்தரமாக விஸ்தரிக்கும் நோக்கில் கையகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

பல தடவை கொழும்பை மையமாகக் கொண்ட நில அளவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அளவீடு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தன. மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணி சவீகரித்தல் சட்டம் ஐந்தாம் பிரிவின் முதலாம் சரத்திற்கு அமைய காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஒகஸ்ட் மாதம் நான்காம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம், கரைத்துறைபற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களான தமிழ் மக்களைக் காணி ஆவணங்களோடு கடற்படை முகாமுக்கு வருகைதந்து காணியை வழங்க எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களம் பல தடவைகள் அறிவித்தல் விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை; மீண்டும் காணிச் சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தன. பதினைந்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொண்டு காணிகளைக் கடற்படை முகாமுக்கு வழங்கத் தயாராகவும் இருந்தனர்.

ஆனாலும் வேறொரு தொகுதி மக்கள் தமது காணிகளை சுவீகரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இழப்பீடுகளையும் பெற மறுத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் ஆகியோர் மக்களுடன் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். பொதுமக்களின் கோரிக்கைக் கடிதங்களும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந் நிலையில் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டன. நில அளவை திணைக்கள அதிகாரிகள். பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.