பொருளாதார நெருக்கடித் தீர்வுக்கான

நிதியைப் பெறவே தேசிய அரசாங்கம்- எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் பேராசிரியர் நாலக

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோரிக்கைகள் நியாயமற்றது என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 25 08:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 11:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவிகளைப் பெற வேண்டுமானால். சா்வகட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவா்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டாலும், அரசாங்கத்துடன் இணையாமல் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கு இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டுமென்பதை சஜித் பிரேமதாச உணர்ந்துள்ளதாகவும் அவருடைய கட்சித் தகவல்கள் கூறுகின்றன.


 
இந்த ஒரு நிலையில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுத்து, இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்காமல் சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமானால், சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்காமல் குறுகிய கால நோக்கில் சிறந்த கொள்கையின் அடிப்படையில் சிறியளவு அமைச்சரவையோடு சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவை வழங்குவோம் எனவும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது. அந்தக் கட்சி அரசாங்கம் மீது விமர்சனங்கள் உண்டு. அதனாலேயே ஏனைய கட்சிகளின் உறுப்பினா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டும்.

பொதுஜன பெரமுன அதிகளவில் அமைச்சுப் பொறுப்புக்களைக் கோரியுள்ளதால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி எற்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச அணியும் ஜே.வி.பி போன்ற சிறிய எதிா்க்கட்சிகளும் அமைச்சரவையை அமைப்பதற்குரிய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நியாயமான கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர்த்து எதிர்க் கட்சிகளின் நிலைப்பாடு ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் பேராசிரியர் நாலக கொடஹேவா சுட்டிகட்டினார்.