போர்க்கால மனிதப் புதைகுழியா?

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு

மன்னார் நீதிமன்றம் கட்டளை வழங்கியது
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 27 17:20
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 28 23:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் அடங்கிய பொதிகளை மன்னார் நீதிவான் முன்னிலையில் பிரித்தெடுத்து அமெரிக்க புளொரிடா மாநிலத்திற்குப் பகுப்பாய்வுகுக்கு அனுப்பிவைக்க மன்னார் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் புதன்கிழமை மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின் போதே மன்னார் நீதவான் மேற்படி கட்டளையை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
 
எலும்புகள் அடங்கிய பொதிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்ற உத்தரவில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பொதிகளை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் அல்லது மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுத்து, அப்பொதிகளில் உள்ள மனித எழும்புகளை அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் உள்ள மானுடவியல் நிபுணர்களின் பகுப்பாய்விற்கு உட்படுத்த கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழி வழக்கின் வழக்கு தொடுநரான மன்னார் பொலிஸார் ஏலவே கடந்த வழக்கு தவணையின் போது விண்ணப்பம் செய்திருந்தனா்.

மன்னார் நீதிமன்றம் அதற்கான கட்டளையை அன்றைய தினமே வழங்கியிருந்தது.

எனினும் கடந்த புதனன்று திருக்கேதிஸ்வரம் புதைகுழி வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றில் நடைபெற்றபோது அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள எழும்புகள் அடங்கிய பொதிகள் அனைத்தையும் மன்னார் நீதவான் முன்னிலையில் அதனை பிரித்தெடுப்பதற்கான புதிய கட்டளையை வழங்குமாறு மன்னார் பொலிஸார் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே கடந்த புதன் மன்னார் நீதிமன்றம் அதற்கான கட்டளையை வழங்கியுள்ளதாகவும், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார்.

எலும்புகள் அடங்கிய பொதிகள் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் உரிய முறைப்படி பிரித்தெடுத்ததின் பின் அமெரிக்கா புளொரிடா மாநிலத்தில் உள்ள மானுடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பட்டு, அங்கு கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு (C-14 Carbon Dating Test) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை அறிக்கைகள் விரைவாக பெற்றுகொள்ளபடும் எனவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதியன்று மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் வடிகாலொன்றினை நிர்மாணிக்கும் நோக்கில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சமயம் குறித்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் பெருமளவான மனித எலும்புகள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந் நிலையில் மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, இது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

பி 768/2013 எனும் இலக்கமுடைய குறித்த வழக்கின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி திருக்கேதிஸ்வரம் பகுதியில் மேற்படி மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதி, பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்களினால் அகழப்பட்ட சமயம் பல நூற்றுக்கணக்கான முழுமையான மனித எலும்புக்கூடுகள் கொண்ட மாபெரும் மனித புதைகுழி அப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் போர்க் காலங்களில் இலங்கை படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில், திருக்கேதிஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுடையதென தமிழர் தாயகப்பகுதியில் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மிகப் பெரும் இராணுவத் தளமான தள்ளாடி இராணுவ முகாமின் அருகாமையில் திருக்கேதிஸ்வரம் பகுதி அமைந்திருந்தமையும், 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதிவரை திருக்கேதிஸ்வரம் மற்றும் அதன் அருகில் இருந்த மாந்தை ஆகியன அதிக இராணுவ கட்டமைப்புகள் உடைய அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தமையும் இவ்வாறான சூழ்நிலையில் திருக்கேதிஸ்வரம் பகுதியில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட விடயம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வதேச ரீதியிலும் திருக்கேதிஸ்வரம் புதைகுழி விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றது. மேலும் திருக்கேதிஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பில் மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலம் சென்ற இராயப்பு ஜோசப், புதைகுழி தொடர்பான மர்மம் வெளிப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையில் வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நலன் சார்பில் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து ஒன்பது வருடங்களாகத் தொடர்ச்சியாக மன்னார் நீதிமன்றில் முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.