ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக

கொழும்பில் பேரணி-பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரிப் போராட்டம்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 30 20:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 30 22:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்ட கலகமடக்கும் பொலிஸார், வீதிகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யுவதிகள் மீது சரமாரியாகத் தாக்கினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் அந்தச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தியுமே இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
மருதானை தொழில் நுட்பக்கல்லூரி முன்பாக ஆரம்பித்த பேரணி, கோட்டை ஊடாகச் செல்ல முற்பட்டபோது கலகமடக்கும் பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து கோட்டைக்குச் செல்லும பிரதான வீதியை வழிமறித்தனர்.

இதனால் அமைதியாகத் திரும்பிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானை சுற்று வட்டம் ஊடாக பொரளைச் சுற்றுவட்டத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஆனால் மருதானை டீன்ஸ் விதியில் கம்பி வேலிகளை அமைத்துத் தடை செய்ய பொலிஸார், கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர்.

அதனையும் மீறிச் செல்ல முற்பட்டபோது நீர்த்தாரைப் பிரயோகம் செய்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். அச்சுறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பொலிஸாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.