இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் இருந்து

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இல்லை

பெயரை மாத்திரம் மாற்றுவதற்குத் திட்டம் என்கிறார் சட்டத்தரணி தவராசா
பதிப்பு: 2022 செப். 15 20:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 01:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னாரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி பொதுமக்களின் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. புதன்கிழமை மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கையெழுத்துகளைப் பெரும் பணிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் முன்னணி மற்றும் சர்வஜன நீதி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வாகனப் பவனி மூலம் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறும் நடவடிக்கைகள் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
ஐந்தாவது நாளாக குறித்த கையெழுத்து பெறும் செயற்பாடுகள் மன்னார் நகரில் இன்று புதன்கிழமை பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் முன்னணி செயலாளர் சட்டத்தரணி எஸ். டினேசன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச, நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

இதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஊர்வலங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதினால், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் செய்யப்படபோவதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன் பெயர் மட்டுமே மாற்றம் செய்யப்படும் எனவும், குறித்த சட்டத்தில் கூறப்படும் கொடூரமான உள்ளடக்கங்கள் மாற்றமடையப்போவதில்லை எனவும் கூறினார்.

சர்வேதச நாடுகள் இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பது குறித்து இலங்கைக்கு தமது கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் நடைமுறையில் உள்ள மேற்படி பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார்.

ரணில் - மைத்திரி நல்லாட்சிக் காலத்தில் இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், எனும் கோரிக்கைகள் ஜெனிவா வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சர்வதேச அழுத்தம் காரணமாகக் கடந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்திருந்தது. இதனடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் நிலைப்பாட்டுக்கு வந்த இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயரை, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் என பெயர் மாற்றி, அதற்கான சட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்துள்ளது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட மிக மிக மோசமானதும், கொடூரமானதுமான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டதாக ஏமாற்றி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கமுடியாதபடி பாதுகாப்புமிக்க பலமான அரணாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நாட்டில் அமுல்படுத்த முற்படுகிறது.

ஆகவே இலங்கை அரசு பயங்கரவாதத் தடை சட்டத்திற்குப் புதிய பெயரை சூட்ட முற்படுகிறதே தவிர, குறித்த அச்சட்டத்தில் உள்ள பயங்கரமான உள்ளடக்கங்களை இல்லாமல் செய்வதற்கு என்றும் முன்வரப்போவதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.