உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு

ஒக்ரோபர் 14 ஆம் திகதி விசாரணை
பதிப்பு: 2022 செப். 16 22:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 17 11:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னிலையாக வேண்டும்.
 
பேராயர் இல்லத்தைச் சேர்ந்த அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராகப் பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ள நிலையிலேயே எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது, அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லையென பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் ஜெனிவா மனித உரிமைச் சபையிலும் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.