தொடரும் பொருளாதார நெருக்கடி-

நிதி வழங்குநர்களிடம் இருந்து உதவியைப் பெற இலங்கை தொடா்ந்து பேச்சு நடத்த வேண்டும்

இல்லையேல் கடும் நெருக்கடி ஏற்படும் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்
பதிப்பு: 2022 செப். 22 07:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 19:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைஅரசாங்கம் தமக்குரிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை, சர்வதேச கடன் வழங்குநர்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெறும் மேலதிகமான கலந்துரரையாடல்களின்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நிதி ஆலோசகர்களான க்லிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) மற்றும் லசார்ட் (Lazard) ஆகியோரின் உதவியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
இலங்கை தனது கடன் மறுசீரமைப்புக் குறித்த திட்டங்களை கடன் வழங்குநர்களிடம் முன்வைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதிவியுள்ளது. இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முறையாக ஆரம்பித்து வைக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான தனது பிரேரணையை முன்வைத்து நிதி உதவியை வழங்குவதற்கு முன்னர், இலங்கை தனது சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மைப் பத்திரங்களின் படி பெரியளவிலான கடன் தொகையை இலங்கை அரசாங்கம் பெற்றுள்ளது.

இலங்கைக்கு இருதரப்பு கடன்களை சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் வழங்கியுள்ளன அதேவேளை வேறு சில நாடுகளும் வழங்கியுள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு கடன் வழங்குநர்கள் தமது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அதற்குரியவாறு இலங்கை அவர்களுடன் பேச்சு நடத்தவும் வேண்டும். அப்படி இல்லையேல் இலங்கைக்குக் கடன் வழங்கும் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு திட்டதுக்கு இலங்கை உரிய ஏற்பாடு செய்யவில்லையானால், பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதெனவும் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற சிறிலங்கா அரசாங்கம் பதினாறு தடவைகள் நிதியத்தை நாடியிருந்ததாகவும் இச் சந்தர்ப்பங்களுடன் ஒப்பிடும்போது பதினேழாவது தடவை இடம்பெறும் சந்திப்பு வேறுபட்டது எனவும் அவர் கூறினார்.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதிக வட்டி வீதங்கள் அறவிடப்படும் இந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதும் மிக முக்கியமான நடவடிக்கை என்றும் அவர் மேலும் கூறினார்.