ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில்

கொழும்பில் இராணுவ முகாம்கள் அதிகரிப்பு என்கிறார் பீரிஸ்

பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் போராட்டங்களை அடக்க முயற்சியாம்
பதிப்பு: 2022 செப். 27 22:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 27 23:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அரச இரகசியங்கள் சட்டத்தின் பிரகாரம் கொழும்பில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பீரிஸ் கூறினார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் பீரிஸ், அமைச்சரவை இரகசியங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் இச் சட்டம் 67 வருடங்கள் பழமையானது என்றும் இச் சட்டத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்பு வலையம் ஒன்றை உருவாக்க முடியாதெனவும் கூறினார்.
 
காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது எனவும், கொழும்பில் வேறெங்கும் போராட்டங்களை நடத்த முடியாதவாறு பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் பீரிஸ் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

கொழும்பு பாதுகாப்பு வலையமாக்கப்படும் என அரசாங்கம் கூறியபோதும், இதுவரை அரச வர்த்தமானி இதழில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.