பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுச் சர்ச்சைகளுக்கு மத்தியில்

அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிக்க ஏற்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளும் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது
பதிப்பு: 2022 ஒக். 27 21:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 29 13:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பதின் நான்காம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
 
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் இருபத்து இரண்டாம் திகதி மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ளது.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் மாதம் இருபத்து மூன்றாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் எட்டாம் திகதி மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட அரச அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் குறிப்பாகப் பரிந்துரைகள் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக உறுதியளித்துச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஒன்பது பில்லியன் டொலர்கள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்படவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமானால் சா்வதேச நாணய நிதியம் முன்வைத்த பாிந்துரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு மாத்திரமே ஏற்பட்டது என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாகச் சமா்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையிலேயே வரவுள்ள 2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.