கட்டுநாயக்க விமான நிலையத்தில்

கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையினால் இலங்கை வான்வழிச் சேவைகளை வெளிநாடுகள் பொறுப்பேற்கும் அபாயம்

இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் ஒப்படைக்க முயற்சி
பதிப்பு: 2022 ஒக். 30 10:26
புதுப்பிப்பு: ஒக். 31 12:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவின் விமான சேவைக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பல்வேறு தாக்கங்களில் ஒன்றாகவே விமான சேவைக்கான நெருக்கடியையும் எதிர்நோக்க வேண்டிய இருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையால், இலங்கை வான் வழியாகச் செல்லும் சர்வதேச விமானங்களுக்கான வான்வெளிச் சேவையை வெளிநாட்டு நிறுவனங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி எடுப்பதாகக் கூறப்படுகின்றது. பணியாட்கள் தட்டுப்பபாடு என்றும் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் பயிற்சி இல்லாமல் அவர்களை உடனடியாகப் பணியில் அமர்தத முடியாதெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
சுமார் நூற்று ஐம்பது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் தற்போது எண்பது பேர் மாத்திரமே கடமையில் இருப்பதாக இலங்கைச் சிவில் விமான திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக இலங்கையில் தரையிறங்கும் மற்றும் வெளியேறும் விமானங்களை மாத்திரம் கட்டுப்படுத்துவதுடன், இலங்கை ஊடாகச் செல்லும் சர்வதேச விமானங்கள் தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏறத்தாள நூறு சர்வதேச விமான சேவைகள் நாளொன்றுக்கு இலங்கை ஊடாகப் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானங்களுக்கு இலங்கை வான்பரப்பைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவையில் விமானம் ஒன்றுக்கு 250 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன.

ஆகவே இலங்கைத்தீவின் வான்வழியாகச் செல்லும் விமானங்களின் கட்டுப்பாட்டை இழந்தால், நாளொன்றுக்கு சுமார் 25,000 அமெரிக்க டொலர்களை இலங்கை இழக்க நேரிடும்.

சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இரவில் 10 மணி நேரமும் பகலில் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நேரங்களுக்கு மேலதிகமாக எந்தவொரு கட்டுப்பாட்டு அதிகாரியும் கடமையாற்ற முடியாது.

ஆனால் கட்டுப்பாளர் பற்றாக் குறையினால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் இரவில் பத்து மணித்தியாலங்களும், பகலில் 14 முதல் 18 மணித்தியாலங்களுக்கும் மேலாகமாகப் பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பணிச் சுமையால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறப்படுகின்றன.

இதனால் எதிர்காலத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கை வழியாகச் செல்லும் விமானங்களின் கட்டுப்பாட்டுப் பொறுப்புகளை ஏற்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.