இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில்

இருபத்து இரண்டாவது திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்

சபாநாயகர் கையொப்பமிட்டார்- பசில் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது
பதிப்பு: 2022 ஒக். 31 10:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 02 09:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாதென்பது உள்ளிட்ட இலங்கை ஒற்றையாட்சியை நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அறிவித்துள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் செய்யப்பட்ட இந்த திருத்தச் சட்டமூலம் கடந்த 21 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன் இன்று கையொப்பமிட்டார்.
 
அரசியலமைப்புக்கான இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டமூலம் பத்தாம் திகதி ஓகஸ்ட் மாதம் 2022 அன்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படடது.

இச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சு சார்ந்த ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

ஒக்டோபர் இருபதாம் திகதியும் 21ஆம் திகதியும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றன.

இச் சட்டமூலத்துக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆதரவளிக்கவில்லை. எதிராக வாக்களிக்காமல் முன்னணியில் இரண்டு உறுப்பினர்களும் வாக்கெடுப்பைத் தவிர்த்துக் கொண்டனா்.

இரட்டைப் பிராஜவுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாதென்பதை வலியுறுத்தும் இச் சட்டம். புலம்பெயர் தமிழர்களுக்குப் பாதிப்பென கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.

ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.