இலங்கைத்தீவில்

ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகப் பேராயர் மல்கம் ரஞ்சித் ரணில் அரசாங்கம் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதாகச் சட்ட மா அதிபர் திணைக்களம் மீது கடும் விசனம்
பதிப்பு: 2022 நவ. 08 21:31
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 11 22:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குவதாகவும் பேராயர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட பின்னர் கருத்துக்கூறாமல் அமைதிகாத்திருந்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
 
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படுவதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீதும் பேராயர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் அல்லது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டக்கார்களுக்கு எதிராக தற்போதுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படுவது கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறான மற்றும் நியாயமற்ற முறையில் பயன்படுத்துவதற்கும் அறிக்கையில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக - சமயத் தலைவர்கள் மற்றும் அத்தகைய கொள்கைகளுக்கு ஆதரவான முறையில் அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மூன்றுபேர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் நீதிக்கு மாறான முறையில் எழுபத்து ஐந்து நாட்களுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.