வடமாகாணம்

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் தமிழர்களின் காணிகள் மீண்டும் அரசாங்கத்தால் அபகரிப்பு

மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் குற்றம் சுமத்துகிறார்
பதிப்பு: 2022 நவ. 11 21:57
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 00:21
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பரப்புக்கடந்தான் கிராமத்தில் 630 தமிழ் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் தனிநபர்களினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளில் பெரும் பகுதி இலங்கை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய கே.கணேஷின் பணிப்பின் பேரில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் காணிகள் அற்ற மக்களுக்கு பரப்புக்கடந்தான் பகுதியில் அரச காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
 
இதற்கமைய மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தினால் காணிக்கச்சேரி ஒன்று நடத்தப்பட்டு பயனாளிகள் தெரிவும் இடம்பெற்றது.

இவ்விதம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலில் 1983 ஜூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து வெளியேறி மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வசித்த 100இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களான தமிழ் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டு, குறித்த குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

பரப்புக்கடந்தான் கிராமத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 337 ஏக்கர் பரப்பளவுடைய அரச காணிகள், ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர் வீதம் உரிய முறையில் நில அளவை செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்தன.

கடந்த 1989ஆம் ஆண்டு காணிகள் கிடைக்கப்பெற்ற குடும்பங்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தினால் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 15.000 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும் குறித்த பணத்தொகையை கொண்டு பலர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளில் சிறிய வீடுகளை கட்டி அவ்வீடுகளில் வசித்து வந்ததுடன் தமது எஞ்சிய காணிப்பகுதிகளில் தோட்டச்செய்கைகளை மேற்கொண்டதாகவும் பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கின்றார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான யுத்த நடவடிக்கை காரணமாக பரப்புக்கடந்தான் கிராமத்தில் வசித்த அனைத்து தமிழ் குடும்பங்களும் படகுகள் மூலம் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து அங்குள்ள அகதிகள் முகாமில் வசித்தனர்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் சுமார் 100ற்கும் மேற்பட்ட பரப்புக்கடந்தான் குடும்பங்கள் மீண்டும் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பி மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் தமக்கு வழங்கப்பட்ட காணிகளில் மீள்குடியேறுவதற்க்கு முற்பட்ட வேளை அவர்களில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே குடியமருவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் இருந்து மீண்டும் பரப்புக்கடந்தான் கிராமத்திற்கு மீளத்திரும்பி தமது காணிகளில் குடியமர்ந்தவர்கள் தவிர்ந்த எஞ்சிய தமிழ் குடும்பங்களுக்கு அவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட காணிகளில் குடியமருவதற்கு மாந்தை பிரதேச செயலக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சுட்டிக்காட்டுகின்றார்.

பரப்புக்கடந்தான் பகுதியில் முன்பு வசித்த நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழகம் பகுதியில் உள்ள பல அகதிகள் முகாமில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் தனியார் சிலரினால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணியில் பெரும் பகுதியை இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் எல்லைக்கற்களை நாட்டி குறித்த காணி தமது திணைக்களத்திற்கு உரிய காணி என உரிமை கோரி வருவதாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைக்கு மேலும் தெரிவிக்கிறார்.

மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் அரசினால் வழங்கப்பட்ட குறித்த காணியை தமக்கு மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடமும், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளிடமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தும், இதுவரை எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பரப்புக்கடந்தான் மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட குடிநிலக்காணிகள் தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவில் பேணப்பட்ட ஆவணங்கள், குறித்த காணிகள் தொடர்பான வரைபடங்கள் மற்றும் ஏனைய தஸ்தாவேஜூகள் காணாமல் போய் விட்டதாகவும், அழிவடைந்து விட்டதாகவும் தெரிவித்து பிரதேச செயலக அதிகாரிகள் பரப்புக்கடந்தான் மக்களை தொடர்சியாக ஏமாற்றி வருவதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.