ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின்

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் இல்லை எனவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2022 நவ. 14 08:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 00:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வரவுசெலவுத் திட்டத்தின் மொத்தத் தொகையில் பத்து வீதம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு தொகை எனவும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்குக் கிழக்கில் மீள் குடியேற்றம் மற்றும் உதவிகள் தொடர்பான விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
 
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் இழப்பீடுகள் எதுவும் இல்லை என்றும், மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் ஆபத்துக்களே கூடுதலாகக் காணப்படுவதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வரவுசெலவுத் திடடம் பணம் படைத்தவர்களுக்கே வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா, சாதாரண மக்களை மேலும் பாதிக்கும் முறையில் வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் எதனையும் வரவு செலவுத் திட்டத்தில் காண முடியவில்லையென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரச ஊழியர் மட்டத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் ஒன்றரை ட்ரில்லியன் ரூபா அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். பொருளாதார ரீதியில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

மகிந்த ராஜபக்ச அணி வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குச் சர்ச்சையான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.