2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில்

உதவி வழங்கும் நாடுகள் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக இணக்கம் வெளியிடவில்லை என்கிறாா் அமைச்சா்

ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு எனவும் கூறுகிறாா்
பதிப்பு: 2022 நவ. 17 10:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 17 13:24
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் அரச ஊழியர் மட்டத்தில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள நிலையில், இறுதி ஒப்பந்தம் அரசாங்கத்துடன் செய்யப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் செய்யப்படும் ஒப்பந்தமே அதிகாரபூர்வமானது என்றும் அமைச்சர் கூறினார். அரச ஊழியர்மட்ட ஒப்பந்தத்தில் பல பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயக்கம் காண்பித்து வந்த நிலையில். அரசாங்கம் அதிகாரபூர்வமான ஒப்பந்தத்தைச் செய்யவுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
 
சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த விடயங்களில் நடைமுறைப்படுத்தப்படக் கூடியவற்றுக்கு ஏற்ப அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெற்று எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புக் குறித்துப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கான சமிக்ஞைகள் எதனையும் இன்றுவரை வெளியிடவில்லை.

ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சா் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட அரச ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.

ஆனால் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர், அந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சர்வதேச நாணய நிதியம்,ஆரம்பகட்ட நிதியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.