சீன - இலங்கை உறவு

சீனாவுக்கு எதிரான சாணக்கியனின் கருத்தைக் கண்டித்துக் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சீனாவின் உதவி தேவையென்று சிங்கள அமைப்பு கோசம்
பதிப்பு: 2022 டிச. 09 18:19
புதுப்பிப்பு: டிச. 14 08:02
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கையோடு விட்டுக் கொடுத்துச் செயற்பட வேண்டும் இல்லையேல் சீனா வீட்டுக்குப் போ என்று போராட நேரிடுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினர் சாணக்கியன் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய கருத்தைக் கண்டித்துக் கொழும்பில் வெள்ளிக்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. நவ ஜனதா பெரமுன எனும் சிங்களக் கடும்போக்குவாத அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
 
சீனாவிற்கு ஆதரவளிக்கும் இந்தச் சிங்கள அமைப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. சாணக்கியனுக்கு எதிரான பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்த குறித்த சிங்கள அமைப்பின் பிரதிநிதிகள், சீனாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.

சீனா இலங்கையின் பொருளாதார வளங்களை ஆக்கிரமித்துள்ளதே தவிர, இலங்கையின் பொருளாதார மீட்சிக்குரிய உதவிகள் எதனையும் செய்யவில்லை என்று சாணக்கியன் இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

சீனா இலங்கை மக்களின் நண்பன் அல்ல, சீனா ராஜபக்சக்களின் நண்பன் என்றும் அவர் கூறியிருந்தார்.

சாணக்கியன் வெளியிட்ட இக் கருத்துக்கள் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது என்றும், சீனா இலங்கையுடன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்பது சாணக்கியனின் நோக்கம் எனவும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.

சீனாவின் இலங்கைக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதாகவும், சாணக்கியனின் சீனா தொடர்பான கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சீனாவைப் பகைத்துக் கொள்ள முடியாதெனவும் சாணக்கியனின் கருத்தைக் கண்டிக்க வெண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.