உள்ளூராட்சி சபைத் தேர்தல்

மைத்திரி, விமல், டளஸ் புதிய கூட்டணி

ராஜபக்சவின் மொட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை
பதிப்பு: 2023 ஜன. 11 09:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 14 21:09
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இந்த அரசியல் கூட்டணி புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான அங்குராட்பன நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், செய்வாய்க்கிழமை புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் சில உறுப்பினர்களைப் புதிய கூட்டணிக்குள் உள்வாங்குவது குறித்துத் தொடராகப் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் ராஜபக்சக்களின் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றக்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் செவ்வாய்க்கிழமை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, கட்டுப் பணம் செலுத்துவதைத் தற்காலிகமாக இடை நிறுத்துமாறு செவ்வாய்க்கிழமை மாலை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.