இலங்கையின்

சுதந்திர தின நிகழ்வுக்கு இருபது கோடி செலவு- ரணில் உரை ரத்து

கொழும்பு நிகழ்வுகள் பற்றி அமைச்சர் விளக்கம்
பதிப்பு: 2023 ஜன. 13 21:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 14 21:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் ஐம்பத்து ஐந்தாவது சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு இருபது கோடி ரூபா செலவாகுமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். சுமார் ஐம்பத்து ஏழு கோடி ரூபா செலவாகுமென மதிப்பிட்டதாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், செலவுகளைக் குறைத்துக்கொள்ள அரசாங்கம் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அசோக பிரியந்த இவ்வாறு கூறினார்.
 
செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதால் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருபது கோடி ரூபா வரை குறைத்ததாகவும் இந்தச் செலவுத் தொகையை மேலும் குறைப்பதற்குரிய மதிப்பீடுகள் தொடர்ந்து செய்யப்படுவதாகவும் கூறினார்.

சுதந்திர தின அணிவகுப்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமாகி காலி முகத்திடலில் முடிவடையும். அதேவேளை, காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றமாட்டார் என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்குபற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வை சுதந்திர தினத்துக்கு முன்பாக அறிவிப்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். ஆனால் பின்னர் அது பற்றி எதுவுமே கூறவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக மூன்று சுற்றுப் பேச்சுக்கள் இந்த மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சுற்றுப் பேச்சுடன் தொடர் பேச்சுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.