சர்வகட்சி மாநாடு

தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் ரணில் ஏமாற்றுகிறாராம்- பேராசிரியர் திஸ்ஸ விதாரண

மாகாண சபைத் தேர்தல்களை 2017 இல் ரணில்தான் நிறுத்தியவர் என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2023 ஜன. 25 23:41
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 27 21:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் சமூகத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோதே 2017 ஆம் ஆண்டுதான் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ரணில் பேசுகிறார். தமிழரசுக் கட்சி கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் சமஸ்டித் தீர்வு பற்றிப் பேசவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டமும் தீர்வு அல்ல என்று கூறுகின்றனர்.
 
ஆகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களுடன் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியாது என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண கொழும்பில் இன்று புதன்கிழமை கருத்து வெளியிட்டார்.

அதிகாரத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக்கொண்டு இலங்கையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ரணில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தினார்.

எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக தெரிவித்த ரணில் தற்போது அது பற்றி எதுவுமே பேசவில்லை என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, சர்வகட்சிக் கூட்டத்தில் ஜே.வி.பி கலந்துகொள்ளாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளமாட்டார் என்றும் கட்சியின் ஏனைய சில உறுப்பினர்கள் மாத்திரமே பங்குகொள்வர் என்றும் கூறப்படுகின்றது.