பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர் விவகாரங்கள்

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கமா?

சந்திப்பு நம்பிக்கை தருவதாகக் கூறுகிறார் அமைச்சர்
பதிப்பு: 2023 ஜன. 26 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 27 21:40
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைக்குக் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக் கலந்துரையாடல்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக அரசாங்கம் அறிவித்தபோதும் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.
 
ஆனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி இலங்கைக்கு கிடைக்குமென நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொழும்பில் இன்று முற்பகல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று வியாழக்கிழமை முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியம் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.