இலங்கைத்தீவில்

மார்ச் மாதத்தில் அரசாங்கத்துக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் - அமைச்சர் பந்துல அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடனேயே இந்த அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2023 பெப். 22 08:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 25 23:05
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை அரசாங்கத்துக்கு, மார்ச் மாதத்தில் மட்டும் தாங்கிக்கொள்ள முடியாத கடன் சுமை இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறியத்தந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, மார்ச் மாதத்தில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் 173 பில்லியன் ரூபா. ஆனால் இது போதுமானதல்ல என்றார்.
 
அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி நிவாரணம் போன்றவற்றுக்கு அரசாங்கம் 196 பில்லியனை செலவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எடுத்துக் கூறியதாகவும் அமைச்சர் பெந்துல குணவர்த்தன கூறினார்.

அரசாங்கத்தின் அன்றாட அத்தியாவசிய செலவுக்காக 23 பில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில் மேலதிகமாக மார்ச் மாதத்தில் உள்ளூர், வெளிநாட்டு கடன் சேவைகளுக்காக 508 பில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடனேயே மார்ச் மாதத்தில் நிதியில்லையென அரசாங்கம் பொய்யான தகவலைக் கூறுவதாக எதிர்க்கட்சிகள குற்றம் சுமத்தியுள்ளன.

தேர்தலை நடத்த நிதியில்லை என்று நிதியமைச்சின் செயலாளா் தங்களுக்கு அறிவித்ததாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிஹால் புஞ்சிஹேவா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

நிதிப் பற்றாக்குறையினால் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்குக் கடந்த வாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.