இலங்கை ஒற்றையாட்சி அரசு

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவிப்பு

நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக ஜெனீவாவில் விளக்கம்
பதிப்பு: 2023 மார்ச் 07 09:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 07 23:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சபையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை தொடர்ந்து உரையாடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கை தொடர்பான ஒவ்வொரு ஆண்டுக்குமான ஆறாவது காலகட்ட மீளாய்வு மார்ச் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
 
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை 1980 ஜூன் பதினொராம் திகதி இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக 1983, 1990, 1994, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கை குறித்த ஐந்தாவது காலகட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான ஒவ்வொரு மீளாய்வுக் கூட்டங்களிலும் இலங்கை பங்கேற்றுமுள்ளது. ஆறாவது மீளாய்வுக்கான காலகட்ட அறிக்கை 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பதினெட்டு சுயாதீன உறுப்பினர்களைக் கொண்ட குழு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணித்து வருகின்றது. இலங்கை போன்ற மனித உரிமை மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நாடுகள் பற்றியும் இந்தச் சுயாதீனக் குழு மீளாய்வு செய்து வருகின்றது.

இலங்கை பற்றிய ஆறாவது மீளாய்வுக் கூட்டம் ஹிமாலி அருணதிலக தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, ஜெனீவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தர அலுவலகப் பணியாளர்கள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொள்வர்.

(ICCPR) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சா்வதேச சமாயத்தை இலங்கை 2007 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் சாதாரண சட்டமாக ஏற்றுக் கொண்டது. ஆனால் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.