வடக்கு- கிழக்கு தாயகப் பிரதேசங்களில்

அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை இராணுவம் ஆக்கிரமிப்பு- காணிகளை பிக்குமார் உரிமை கோருவதாக விசனம்

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 25 22:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 15:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு, மைத்திரி- ரணில் அரசாங்கம், தமிழர் தாயகப் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து வருவதாக பொது அமைப்புகளும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை அரசு தமது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தி இலங்கை இராணுவத்தின் இருப்பையும் தமிழர் தாயகப் பகுதிகளில் உறுதிப்படுத்தி வருவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அரசியல் தீர்வுதான் முக்கியமானது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏலவே கூறியிருந்தார். ஆனால் தற்போது அபிவிருத்திக்கு முக்கித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தன் கூறுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையில், தமிழர்கள் இறப்பதற்கும் தமிழர்களது பொருளாதாரம் நலிவடைவதற்கும், பௌத்த பேரினவாதமே காரணம் என, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முப்படைகளை உள்ளடக்கிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்கான செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வது வெட்கக் கேடான செயல்-- முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய சஜீவன், மைத்திரி- ரணில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்வதாகவும் கூறினார்.

வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை, வடமாகாண ஆளுநர் ரெஜனோல்ட் கூரே நாட்டியுள்ளார். தையிட்டி ஜே 250 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணியொன்றையும் பௌத்த குருமார் உரிமை கோருகின்றனர்.

ஆகவே நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாகயப் பிரதேசங்களை மைத்திரி- ரணில் அரசாங்கம் சிங்கள மயப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவில் மகாவலி அதிகாரசபையால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக, மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமைப் பேரவை என்ற அமைப்பு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில், தமிழ் மக்களின் பரம்பரைக் காணிகளில் பலாத்காரமாகக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு, காணி அனுமதிப் பத்திரங்களை, மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது.

இதற்கு எதிராகவே புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து தமிழர் மரபுரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

இதேவேளை, இலங்கையின் முப்படைகளை உள்ளடக்கிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்கான செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வது வெட்கக் கேடான செயல் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ள நிலையில். செயலணிக் கூட்டத்தில் பங்குகொள்ள வெண்டும் என சம்பந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.