சர்வதேச பொறிமுறை மூலமாக நீதி வழங்கப்பட வேண்டும்

மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திடம் உறவினர்கள் வலியுறுத்தல் -ஐ.நா மீதும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2024 மே 18 07:20
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மே 29 18:39
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#un
#us
#canada
#tamils
#srilanka
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்பு தொடர்பான விவகாரங்களை ஐக்கிய நாடுகள் சபை உரிய முறையில் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக வடக்குக் கிழக்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard) தெரிவித்திருக்கின்றனர். மே 18, 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
 
பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். இதன் போது சர்வதேசம் உரிய கவனம் எடுக்கவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

பதினைந்து வருடங்களாக தமது உறவினர்களைத் தேடும் இடைவிடாத பயணத்தின் போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள் குறித்தும் அக்னஸ் கலமார்டிடம் தெளிவுபடுத்தியதாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.

வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம் எங்கும் இறுதிப் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. முள்ளிவாய்க்கால் பிரகடணமும் வாசிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 15 வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தது.

கிழக்கில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் சமூகம் சார் அமைப்புகள், பெண்கள், மீனவர்கள், விவசாயிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் பேரணி ஆரம்பமாகி நினைவு தினம் நடைபெறும் இடத்திற்கு சென்று பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இதன்பின்னர் ஈழத் தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தும் வகையிலான மகஜர் ஒன்று சர்வதேச சமூகத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு திருகோணமலை தம்பலகாமம் நாலு வாசல் பிள்ளையார் கோயிலில் இடம் பெற்றது.

இனஅழிப்பு விசாரணை நடத்தப்பட வேண்டிய இடத்தில் போர்க்குற்ற விசாரணை மற்றும் இலங்கைத்தீவீன் மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் அமைந்திருந்ததையும் மட்டக்களப்பு சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.