காரணம் எதுவுமேயின்றி

மன்னார் நீதிபதி கொழும்புக்குத் திடீர் இடமாற்றம்- இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு கடிதம் அனுப்பியதாகத் தெரிவிப்பு

போர்க்கால மனிதப் புதைகுழி தொடர்பான செயற்பாடுகள் காரணமா?
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 30 10:23
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்ட நீதிபதி ரீ.ஜே.பிரபாகரன் முன்னறிவித்தல் மற்றும் காரணங்கள் எதுவுமேயின்றி திடீரென கொழும்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட நீதிபதியாக இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மன்னார் நீதிபதியாக கடமையாற்றி இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
 
இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதிபதியாக பதவியேற்கும் வகையில் நேற்றுப் புதன்கிழமை அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட நீதவானாக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் பலவற்றை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அத்துடன் இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து வழக்கு விசாரனைகளின்போது நேரடியாகவே எச்சரிக்கையும் செய்திருந்தார்.

மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசுக்குச் சொந்தமான சதொச விற்பனை நிறுவன கட்டடம் ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட போர்க்கால மனிதப் புதைக்குழி தொடர்பாகவும் அவர் கடுமையான உத்தரவுகளை இலங்கைப் பொலிஸாருக்குப் பிறப்பித்திருந்தார்.

இதன் காரணமாக கொழும்பில் உள்ள இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மன்னாரில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் சட்டத்தரணி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் கூறினார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழு வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் உள்ள நீதிமன்ற விவகாரங்களில் இனவாத கண்ணோட்டத்துடன் செயற்பட்டு வருவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.