சர்வதேச தினத்தை முன்னிட்டு

கொழும்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி- செயலகத்தில் மகஜரும் கையளிப்பு

சிங்களவர்கள் சிலரும் இணைந்து போராட்டம்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 30 23:21
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் கொழும்பு அதன் புறகர் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சிங்கள மக்கள் பலரும் கலந்துகொண்டனர். நீதியை நிலைநாட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்களை வெளியிடு என்ற வாசகங்கள் தமிழ் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. காலை 10.30க்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் பின்னர் 11.15க்கு புகையிரத நிலையத்திலிருந்து பேரணியாக காலிமுகத் திடலில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றது.
 
ஆனால் லோடஸ் வீதிச் சந்தியில் வைத்து இலங்கைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

எனினும் நீண்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் சம உரிமை இயக்கத்தின் இணைப்பாளர் ரவீந்ர முதலிகே ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்று மகஜர் ஒன்றை கையளிக் அனுமதிக்கப்பட்டார். நண்பகல் 1.30 வரை போராட்டம் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு மன்னாரில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்ற நிலையில் கொழும்பிலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடித் தந்து விடுங்கள், இல்லையேல் எங்களையும் கொன்று விடுங்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கோஷம் எழுப்பினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலகம் பொய்யானது என்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினால் ஒப்பாசாரத்துக்காவே அந்த அலுவலகம் கொழும்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் கூறி, உறவினர் குற்றம் சுமத்தினர்.

மைத்திரி- ரணில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்றும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும் உறவினர் ஒருவர் ஊடகங்களிற்குக் கருத்து வெளியிட்டார்.

சுமார் நூற்றும் அதிமாகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் கலந்துகொண்டனர். துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.