நிதிக்குழுக் கூட்டம்

யாழ் மாவட்டத்தில் நான்காயிரத்தி 500 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்திடம்- நிதிக்குழுக் கூட்டத்தில் மேலதி அரச அதிபர்

மேலும் 37 ஆயிரம் வீடுகள் தேவை எனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 செப். 03 23:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 00:11
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் முதன் முறையாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று யாழப்பாணத்தில் நடபெற்றுள்ளது. நிதிக்குழுவின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கொழும்பில் இருந்து சென்ற சிங்கள உயர் அதிகாரிகள் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான நிதிகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
 
அத்துடன், போருக்குப் பின்னரான சூழலில் யாழ்ப்பாணத்தில் மீள்க் குடியேறியவர்களுக்கான அடிப்படை உதவிகள் மேலும் வழங்கப்பட வேண்டிய தேவைகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் குறித்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரைடப்பட்டன.

நிதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளுக்கும் கொழும்பின் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலை தொடருவதாக யாழ் செயலக அதிகாரி ஒருவர் கூறினர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளீதரன், சுமார் நான்காயிரத்தி ஐநூறு ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறினார்.

யாழ் மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டின் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கான உதவிகளின் தேவைகள் குறித்தும் அவர் நீண்ட விளக்கமளித்தார்.

யாழ் மாவட்டத்தில் இன்னமும் 37 ஆயிரம் வீ;டுகள் தேவை என்றும் சுப்பிரமணியம் முரளீதரன் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த யூன் மாதம் ஐந்தாம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 14 ஆயிரம் பேருக்கு காணிகள் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியிருந்தார்.

இவ்வாறு காணிகள் இல்லாதவர்களுக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பளைப் பிரதேசத்தில் உள்ள காணிகளை வழங்க முடியும் என அவர் ஆலோசனை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இன்னமும் ஐயாயிரத்தி இருநூற்றி ஐம்பது ஏக்கர் தனியார் காணிகள் இலங்கைப் படையிடம் உள்ளதாக யாழ். மாவட்ட அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏலவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், யாழ் மாவட்ட செலயகத்தில் முன்வைக்கப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான முப்படைகளை உள்ளடக்கிய செயலணிக்கூட்டம் என்று பல கூட்டங்களில் அபிவிருத்திகள் குறித்துப் பேசினாலும் எதுவுமே உருப்படியாக மக்களைச் சென்றடைவதில்லை என யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

அனைத்துக் கூட்டங்களும் கொழும்பை மையப்படுத்திய ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியலமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாவே நடைபெறுகின்றன.

குறைந்த பட்சம் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மையமாகக் கொண்டேனும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.

நிதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளுக்கும் கொழும்பின் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலை தொடருவதாக யாழ் செயலக அதிகாரி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாடசாலைகள் அரச கட்டங்கள் பலவற்றை இலங்கை இராணும் பயன்படுத்துவதாகவும் அவற்றை பொதுமக்களிடமும் வலி வடக்கு பிரதேச சபையிடமும் கையளிக்க வேண்டும் என சுகிர்த்ன் வலியுறுத்தயுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இலங்கைப் படையினர் அபகரித்துள்ள காணிகள் பற்றிய விடயங்கள் எதுவுமே சரியான முறையில் மதிப்பிடப்படவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.