வடமாகாணம்

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தார் சிலை அமைக்க முயற்சி - இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர்

இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் திரும்பினர் பிக்குமார்
பதிப்பு: 2018 செப். 04 23:41
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 14:35
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில், தென்பகுதியில் இருந்து சென்ற பௌத்த பிக்குமார் சிலர், அங்கு புத்தர்சிலை ஒன்றை அமைப்பதற்கு முற்பட்டனர். ஆனால் விடயத்தை அறிந்த பிரதேச இளைர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கு வந்த இளைஞர்கள் இது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும் இங்கு பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் எவரும் வாழவில்லை எனவும் ஆகவே புத்தர் சிலை வைத்து இன மோதலை ஏற்படுத்த வேண்டாம் எனவும் எடுத்துரைத்தனர். குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலைக்கு பௌத்த பிக்குமார் சிலர் சென்று கொண்டிருந்தபோது, பிரதேச இளைஞர்கள் பின்தொடர்ந்து வருவதை அறிந்து தப்பிச் செல்ல முற்பட்டனர்.
 
ஆனாலும் தண்ணிமுறிப்பு குளக்கட்டுப் பகுதியில் பௌத்த பிக்குமாரை இளைஞர்கள் வழிமறித்தனர். இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

முல்லைத்தீவு மணலாறு பிரதேசம் ஏலவே வெலிஓயா என சிங்களப் பெயராக மாற்றப்பட்டு அங்கு சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டு விகாரையும் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த விகாரையைச் சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழுவினரே முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தார் சிலையை வைப்பதற்கு வந்திருந்தனர்.

அதற்கு பிரதேச மக்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் இலங்கைப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்போடு பௌத்த பிக்குமார் பிரதேசத்தைவிட்டு வெளியேறிச் சென்றனர்.

மல்லைத்தீவு
முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்காக பௌத்த பிக்குகளினால் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையை படத்தில் காணலாம்.

கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை மற்றும் பொருட்களுடன் பௌத்த பிக்குமார் அங்கிருந்து வெளியேறியதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

புத்தர் சிலை மற்றும் சிலையை வைப்பதற்கான பொருட்களுடன் லொறி ஒன்றில் பௌத்த பிக்குமார் வந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலையில் பல நூற்றாண்டு காலமாக ஐயனார் ஆலையமொன்று இருந்ததாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

சம்பவத்தை அறிந்து வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா உள்ளிட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பலரும் வருகை தந்தனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மிக மிக வேகமாகத் தீவிரமடைந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.