வடமாகாணம்

கிளிநொச்சி நீரேந்துப் பகுதியிலும் இரத்தினபுரம் பாலத்திற்கு அருகிலும் அத்துமீறிய குடியேற்றங்கள்- மக்கள் முறைப்பாடு

கொழும்பின் அழுத்தங்களினால் தமிழ் அதிகாரிகள் மௌனம்?
பதிப்பு: 2018 செப். 05 09:18
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 14:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், அதனை நிறுத்த மைத்திரி- ரணில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் வெவ்வேறு வடிங்களில் மேலும் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தனியார் காணிகள். தரிசு நிலங்களில் வடக்கு- கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து வரும் பலர் கொட்டில்களை அமைத்து குடியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்திற்கு அருகாகவுள்ள காணிகளிலும் சில நபர்கள் அத்துமீறி கொட்டில்களை அமைத்து குடியிருக்கின்றனர்.
 
இந்தக் காணிகள் குளம் மற்றும் பாலத்தின் விஸ்த்தரிப்புக்காக கிளிநொச்சி நீர்ப்பாசணத் திணைக்களத்தினால் ஏலவே ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆகவே அந்தக் காணிகளில் சட்டத்திற்கு மாறாக தனிப்பட்ட நபர்கள் கொட்டில்களை அமைத்துள்ளனர். இது குறித்து முறையிட்டபோதும் தொடர்ந்தும் அந்தக் கொட்டில்களில் அவர்கள் வாழ்ந்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் உள்ள நிலங்களை அத்துமீறி பிடித்துக் கட்டடங்கள் மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலக அதிகாரிகள். நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேறுமாறு பல தடவை கூறியுமுள்ளனர்.

ஆனாலும் அவர்கள், ஏதோ ஒரு அரசியல் துாண்டுதலின் பின்னணியில் தொடர்ந்தும் அந்தக் கொட்டில்களில் தங்கியிருக்கின்றர். இந்த நிலையில் ஊவா மாகாணம் பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பாலத்தின் அருகில் ஒரே இரவில் கொட்டில் ஒன்றை அமைத்துத் தனது பிள்ளையுடன் வாழ்ந்து வருகின்றார்.

தென்பகுதி அரசியல் பிரதிநிதி ஒருவரின் ஆதரவுடன் கொட்டில் அமைத்துள்ளதை, அவருடைய பேச்சுக்கள் செயற்பாடுகளில் இருந்து அறிய முடிவதாக பிரதேச செயலக அதிகாரி ஒருவர் கூறினார்.

எனவே, இவ்வாறான அத்துமீறல் குடியேற்றங்கள் உரிய முறையில் தடுகப்படவில்லையானால் மேலும் பலர் இங்கு வந்து அத்துமீறி குடியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

பாலத்திற்கு அருகில் சுற்றுமதில் கட்டி, கொட்டில் அமைக்கப்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் வெள்ள நீர் வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்றும் பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் நெருக்குதல்கள் காரணமாக கிளிநொச்சியில் உள்ள திணைக்கள தமிழ் அதிகாரிகள் பலர் மௌனமாக இருப்பதாகவும் தமது அதிகாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி அரச அதிகாரி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.